பாபா சித்திக் கொலையின் முக்கிய சூத்ரதாரி கனடாவில் கைது; இந்தியா அழைத்து வர நடவடிக்கை
பாபா சித்திக் கொலையின் முக்கிய சூத்ரதாரி கனடாவில் கைது; இந்தியா அழைத்து வர நடவடிக்கை
பாபா சித்திக் கொலையின் முக்கிய சூத்ரதாரி கனடாவில் கைது; இந்தியா அழைத்து வர நடவடிக்கை
ADDED : ஜூன் 10, 2025 09:50 PM

மும்பை: பாபா சித்திக் படுகொலையின் சூத்ரதாரி கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மஹாராஷ்டிராவில் தேசியவாத காங். (அஜித் பவார் பிரிவு) தலைவரும், மாஜி அமைச்சருமான பாபா சித்திக் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பிரபல நடிகர் சல்மான் கானின் நண்பர் என்பதால் அவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த கொலையில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஈடுபட்டு இருப்பதையும், பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.
மேலும், இந்த படுகொலைக்கு முக்கிய மூளையாக மற்றும் பின்னணியாக செயல்பட்டு தலைமறைவாக இருந்து வரும் ஜீஷன் அக்தர் என்பவரை மும்பை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இவர் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளி.
இந்நிலையில் கனடாவில் அந்நாட்டு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அதை மும்பை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். கனடாவில் இருந்து மும்பை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஜீஷன் அக்தர் இயற்பெயர் முகமது யாசின் அக்தர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் சொந்த ஊர். ஏற்கனவே அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அக்தரும், மற்றொரு கூட்டாளியுமான சுபம் லோங்கரும், பாபா சித்திக்கை கொலையை திட்டமிட்டனர். பாபா சித்திக் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்ததும் ஜீஷன் அக்தர் தான். கடைசியாக 2022ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஜீஷனை போலீசார் கைது செய்திருந்தனர்.