பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஜோதிடர் கைது
பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஜோதிடர் கைது
பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஜோதிடர் கைது
ADDED : ஜூன் 17, 2025 08:34 PM
புதுடில்லி:பெண்ணிடம், மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லியைச் சேர்ந்த, 28 வயது பெண், தொழில்நுட்ப நிறுவன ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். இவர், ஆன் - லைன் வாயிலாக ஜோதிட பலன்களை பார்த்து வந்தார். அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுமித் பார்கவ்,35, என்பவரின் விளம்பரங்களைப் பார்த்து அவரை தொடர்பு கொண்டார்.
அந்தப் பெண் தனிப்பட்ட மற்றும் அலுவலக ரீதியான பிரச்னைகளை, சுமித்திடம் கூறினார். அந்தப் பிரச்னைகளை சரிசெய்ய, சில பரிகாரம் செய்ய வேண்டும் என சுமித் கூறினார்.
மேலும், உத்தர பிரதேசத்தின் பிருந்தாவனத்தில் பரிகார பூஜை செய்ய, மூன்று லட்சம் ரூபாய் பணம் கேட்டார். அந்தப் பெண்ணும் சுமித் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தினார். ஆனால், அந்தப் பெண்ணுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மீண்டும் சுமித்தை தொடர்பு கொண்ட போது அவர் பேசுவதை தவிர்த்தார்.
இதையடுத்து, டில்லி போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வித்யாதர் நகரில் உள்ள வீட்டில் சுமித் பார்கவை கைது செய்தனர். அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் வடக்கு மாவட்ட துணைக் கமிஷனர் ராஜா பாந்தியா கூறியதாவது:
ஜோதிடம் தொடர்பாக சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்துள்ள சுமித், வாழ்க்கையில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக பேசி பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார். அவர், பாரம்பரிய ஜோதிடர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், குடும்ப பின்னணியைப் பயன்படுத்தி நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளார். எத்தனை பேரிடம் மோசடி செய்துள்ளார் என விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.