பெண்ணிடம் தவறாக நடந்த உதவி எஸ்.ஐ., இடமாற்றம்
பெண்ணிடம் தவறாக நடந்த உதவி எஸ்.ஐ., இடமாற்றம்
பெண்ணிடம் தவறாக நடந்த உதவி எஸ்.ஐ., இடமாற்றம்
ADDED : செப் 14, 2025 11:04 PM
புதுடில்லி:பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், உதவி சப் - இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தெற்கு டில்லி ஆசிரமம் போலீஸ் ஸ்டேஷனில் உதவி சப் - இன்ஸ்பெக்டராக இருந்தவர் வீரேந்தர். மஹாராணி பாக் நகரில் சட்டவிரோதமாக மது விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, வீரேந்தர் தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் காலை சோதனை நடத்தினர். அங்கு ஒரு கடையில் இருந்து, 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஒரு பெண், தன் கடையில் போலீசார் சோதனை நடத்திய போது, உதவி சப் - இன்ஸ்பெட்கர் வீரேந்தர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறினார். ஆனால், சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக தன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அந்த பெண் அபாண்டமாக குற்றம் சுமத்துவதாக போலீசார் கூறினர்.
ஆனால், அந்த பெண் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்தப் பதிவில் ஏராளமானோர் போலீசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, விசாரணை நடத்திய தென் கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் மற்றும் லஜ்பத் நகர் உதவி கமிஷனர் ஆகியோர், ஆசிரமம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விசாரித்தனர்.
அப்போது, ஆசிரமம் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்ட ஒரு கும்பல், உதவி சப் - இன்ஸ்பெக்டர் வீரேந்தருக்கு எதிராக கோஷமிட்டது. துணை கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர் ஆகிய இருவரும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆயுதப்படைக்கு வீரேந்தர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தென்கிழக்கு மாவட்ட பொது குறை தீர்க்கும் பிரிவு விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.