Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை' பாக்., மிரட்டலுக்கு அசாம் முதல்வர் பதிலடி

'பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை' பாக்., மிரட்டலுக்கு அசாம் முதல்வர் பதிலடி

'பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை' பாக்., மிரட்டலுக்கு அசாம் முதல்வர் பதிலடி

'பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை' பாக்., மிரட்டலுக்கு அசாம் முதல்வர் பதிலடி

ADDED : ஜூன் 04, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
குவஹாத்தி: ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாகிஸ்தானின் மிரட்டலுக்கு பதிலடி தந்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

இதில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

புதிய மிரட்டல்


இதற்கிடையே சமீபத்தில் அந்நாட்டு ஊடகத்தில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த உதவியாளர் ராணா இஹ்சான் அப்சல் கூறுகையில், 'பாகிஸ்தான் உடனான சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது போல், இந்தியாவுக்கான பிரம்மபுத்திரா நதியை சீனா தடுக்கலாம்' என, குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-


காலாவதியான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா தீர்க்கமாக விலகிய பின், பாகிஸ்தான் இப்போது புதிய மிரட்டலை விடுத்துள்ளது.

இந்தியாவிற்கு பிரம்மபுத்திராவின் நீரை, சீனா நிறுத்தினால் என்ன செய்வது என அச்சுறுத்தி வருகிறது. பிரம்மபுத்திரா நதி விவகாரம் தொடர்பாக ஆதாரமில்லாத தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நதியை ஒரு இடத்தில் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. பிரம்மபுத்திரா நதியில், சீனாவின் பங்களிப்பு என்பது 30 முதல் 35 சதவீதம் மட்டுமே உள்ளது.

பாதிப்புகள் தணியும்


அதுவும், திபெத் எல்லையில் பனிப்பாறை உருகுதல் மற்றும் அங்குள்ள மழைப்பொழிவு பொறுத்தே அமையும். மீதமுள்ள 65 முதல் 70 சதவீதம் வரை இந்திய நிலப்பரப்பில் உற்பத்தி ஆகிறது.

பிரம்மபுத்திரா நதி, புவியியல் மற்றும் பருவமழை காரணமாக நீர்வரத்தை பெறுகிறது. இது, இந்திய எல்லைக்குள் நுழைந்த பின் இங்குள்ள துணை நதிகளின் வாயிலாக பலப்படுத்தப்படுகிறது.

எனவே, பிரம்மபுத்திரா நதியை, சீனா நிறுத்துவதால் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது; அப்படியே நிறுத்தினாலும் அது இந்தியாவுக்கு நன்மையையே தரும். குறிப்பாக, அசாமில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் தணியும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us