டில்லி முன்னாள் அமைச்சர் மீது மேலும் ஒரு வழக்கு; ஆம்ஆத்மிக்கு புதிய நெருக்கடி
டில்லி முன்னாள் அமைச்சர் மீது மேலும் ஒரு வழக்கு; ஆம்ஆத்மிக்கு புதிய நெருக்கடி
டில்லி முன்னாள் அமைச்சர் மீது மேலும் ஒரு வழக்கு; ஆம்ஆத்மிக்கு புதிய நெருக்கடி
ADDED : மார் 19, 2025 07:59 PM

டில்லி: டில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது, அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மேலும் ஒரு ஊழல் வழக்கை பதிவு செய்துள்ளது.
டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது, பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதில், 2,000 கோடி ரூபாய் மோசடி நடந்தது தொடர்பாக, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
டில்லியில் ஆம்ஆத்யின் போது முதல்வராக இருந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது ஏற்கனவே மதுபான ஊழல் வழக்கு உள்ளது. அதுபோல் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் மீதும் சில வழக்குகள் உள்ளன.
அண்மையில், டில்லியில் அரசு பள்ளிகள் கட்டுவதில் ரூ.2,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில், டில்லியில் ரூ.571 கோடி செலவில் சி.சி.டி.வி., கேமிராக்களை பொருத்தும் திட்டத்திற்காக, லஞ்சம் பெற்றதாக சத்யேந்திர ஜெயின் மீது மற்றொரு ஊழல் வழக்கை டில்லி அரசின் ஊழல் தடுப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் சி.சி.டி.வி., கேமிராக்களை பொருத்தும் திட்டத்தை டெண்டர் எடுத்த நிறுவனம், உரிய காலத்திற்குள் அந்தப் பணிகளை முடிக்காததால், ரூ.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை தள்ளுபடி செய்வதற்காக, ரூ.7 கோடியை சத்யேந்திர ஜெயின் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2023 மே மாதம் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ஜ., கூறுகையில், 'பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த டெண்டரை எடுத்தது. இந்த நிறுவனத்திற்கான இழப்பீட்டை சரிசெய்ய சத்யேந்திர ஜெயின் ரூ.7 கோடி லஞ்சம் பெற்றுள்ளார். பா.ஜ.,வும் இது தொடர்பாக புகார் அளித்திருந்தது. ஆனால், ஆம்ஆத்மி விசாரணையை ஒடுக்க நினைத்தது. நீங்கள் ஊழலை மறைக்க பல முயற்சிகள் எடுத்தாலும், தற்போது பதில் சொல்லியே ஆக வேண்டும்,' எனக் கூறியுள்ளது.