மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடில்லி: மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது என கூறியுள்ளார்.
'நேஷனல் சென்சஸ்' எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக, 2021ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக கடந்த 2019ம் ஆண்டில் 8,754 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 3,941 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான், அரசுகளின் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதால், தாமதமின்றி அதை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.அதோடு, ஜாதிவாரியான கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பின்தங்கியுள்ள சமூகத்தினரின் வளர்ச்சிக்கு அது அவசியம் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.
இந்த சூழ்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும், 2027 மார்ச் 1ல் துவங்கும் என கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, வரும் 16ம் தேதி வெளியிடப்படும்.எனினும், பனிப்பொழிவுக்கு இலக்காகும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக 2026, அக்டோபர் 1ம் தேதியே கணக்கெடுப்பு பணி துவங்கும். நாட்டின் மற்ற மாநிலங்களில் இந்த வேலைகள் 2027, மார்ச் 1ல் துவங்கும்.
இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். முதல்முறையாக, இந்த கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 34 லட்சம் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் பேர், அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி இந்த பணியை மேற்கொள்வார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.