கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் மீட்பு
கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் மீட்பு
கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் மீட்பு
ADDED : மே 25, 2025 11:34 PM

கொச்சி: கேரளாவில், கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லைபீரியா நாட்டின் சரக்கு கப்பலில் இருந்து, அனைத்து பணியாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான லைபீரியாவைச் சேர்ந்த 'எம்.எஸ்.சி., - எல்சா- 3' என்ற சரக்கு கப்பல், கேரளாவின் விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தில் இருந்து, கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதிப்பு
இதில், உக்ரைன், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 24 பணியாளர்கள் இருந்தனர். கொச்சி துறைமுகத்துக்கு செல்லும் வழியில், நேற்று முன்தினம் நடுக்கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், சரக்கு கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் கடலில் மிதந்தன. இந்த கன்டெய்னர்களில், 367.1 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84.4 மெட்ரிக் டன் காஸ் எண்ணெயும் இருந்தன.
இவை கடலில் கலந்தால் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். இந்த எண்ணெய் கடலில் கலக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை நம் கடலோர காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சரக்கு கப்பலில் இருந்த பணியாளர்கள் உதவி கோரியதை அடுத்து, கப்பல் கவிழ்ந்த இடத்துக்கு நம் கடலோர காவல் படையினர் சென்றனர்.
நடுக்கடலில் சிக்கித் தவித்த, 21 பணியாளர்களை நேற்று முன்தினம் அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
மீதமுள்ள மூன்று பேரை மீட்பதில் சிக்கல் நிலவியதால், அவர்களை கப்பலிலேயே பத்திரமாக இருக்கும்படி நம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து மீட்புப் பணிக்கு, ஐ.என்.எஸ்., சுஜாதா போர்க்கப்பல் நேற்று அதிகாலை வந்தது.
பேரிடர் மேலாண்மை
அந்த கப்பலில் இருந்த அதிகாரிகள் உதவியுடன், சரக்கு கப்பலில் சிக்கித் தவித்த மேலும் மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் மீட்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே, கேரள கடற்கரையில் கன்டெய்னர்கள் அல்லது எண்ணெய் கசிவு இருப்பதை பார்த்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி, மக்களுக்கு அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.