Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சிறுவனின் வாழ்க்கையை மாற்றிய ஆமதாபாத் விமான விபத்து

சிறுவனின் வாழ்க்கையை மாற்றிய ஆமதாபாத் விமான விபத்து

சிறுவனின் வாழ்க்கையை மாற்றிய ஆமதாபாத் விமான விபத்து

சிறுவனின் வாழ்க்கையை மாற்றிய ஆமதாபாத் விமான விபத்து

Latest Tamil News
ஆமதாபாத்: ஆமதாபாத் விமான விபத்தை படம் பிடித்த 17 வயது சிறுவனின் வீடியோ விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், விமானத்தை பார்த்து படம்பிடிப்பதில் ஆர்வம் காட்டிய வந்த அந்த சிறுவன், விபத்தை பார்த்து பயந்து போன நிலையில் காணப்படுகிறார்.

கடந்த 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்த பிரிட்டன் தலைநகர் லண்டன் கிளம்பிய போயிங் 787- 8 ட்ரீம்லைனர் விமானம் நொறுங்கி விழுந்து அதில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்த இடத்தில் இருந்த விடுதி மாணவர்கள் மற்றும் அப்பகுதி வாசிகள் என மொத்தம் 270 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விமானத்தில் இருந்த கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, விமான விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், விபத்து தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்த விமான விபத்தை ஆமதாபாத்தை சேர்ந்த மகன்பாய் அன்சாரியின் மகன் ஆர்யன்(17) தனது மொபைல்போனில் பதிவு செய்த வீடியோ இந்த விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஆர்யனின் முக்கிய பொழுது போக்கு,பறந்து செல்லும் விமானத்தை பார்ப்பது. அந்த வகையில் கடந்த 12ம் தேதி தனது வீட்டின் மேல் பறந்து சென்ற விமானத்தை தனது மொபைல்போனில் பதிவு செய்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதும் அந்த மொபைலில் பதிவாகி உள்ளது.

இது தொடர்பாக ஆர்யன் கூறுகையில், சொந்த கிராமத்தில் இருக்கும் போது விமானம் பறந்து செல்வதை பார்க்க பிடிக்கும். தந்தை இருக்கும் வீட்டிற்கு வந்தால், விமானத்தை அருகில் பார்க்கலாம் என நம்பி வந்தேன். கடந்த 12ம் தேதி தான் இங்கு வந்தேன். விமானம் அருகே பறந்து சென்றது. இதனை நண்பர்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக அதனை வீடியோ பதிவு செய்தேன். விமானம் தாழ்வாக பறந்து சென்றதை பார்த்த போது, அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கப் போவதாக நினைத்தேன். ஆனால், கீழே சென்ற உடன் தீப்பிடித்தது. பிறகு வெடித்தது. இதனால் நான் பயந்து போனேன். வீடியோவை எனது சகோதரியிடம் காட்டிய பிறகு விபத்து குறித்து தந்தையிடம் தெரிவித்தேன். என சோகத்துடன் கூறினார்.

இவரது தந்தை மகன்பாய் அன்சாரி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தான், விமான நிலையம் அருகில் இருக்கும் 3 மாடி கொண்ட கட்டடத்தில் குடிபெயர்ந்தார். தனியாக தங்கி உள்ளார். அவரது குடும்பத்தினர் குஜராத் - ராஜஸ்தான் எல்லையில் உள்ள கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவரது மகள் போலீஸ் தேர்வு எழுத ஆமதாபாத் வந்துள்ளார். அவருடன் ஆர்யனும், தந்தையிடம் புத்தகம், பேனா, நோட்டுகள் வாங்குவதற்கு வந்துள்ளார்.

இது தொடர்பாக ஆர்யனின் தந்தை மகன்பாய் அன்சாரி கூறுகையில், கிராமத்தை விட்டு எனது மகன் தற்போது தான் முதல்முறையாக இங்கு வந்துள்ளார். இங்கு வருமாறு அழைக்கும்போது எல்லாம் விமானத்தை பார்க்க முடியுமா என கேட்பார். வீட்டின் மாடியில் நின்றால் ஏராளமான விமானத்தை பார்க்கலாம் என நான் கூறி அழைத்துவந்தேன்.

எங்களிடம் பேட்டி எடுக்க ஏராளமானோர் கோரிக்கை விடுக்கின்றனர். தினமும், ஏராளமான பத்திரிகையாளர்கள் எங்களது வீடுகளை சூழ்ந்து கொண்டு பேச சொல்கின்றனர். இந்த சம்பவம் எனது மகனின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால் பயந்து போன அவர், மொபைல்போன் பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us