பீஹார் வாக்காளர் பட்டியல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்த முக்கிய தகவல்!
பீஹார் வாக்காளர் பட்டியல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்த முக்கிய தகவல்!
பீஹார் வாக்காளர் பட்டியல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்த முக்கிய தகவல்!
ADDED : செப் 01, 2025 05:39 PM

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பான கோரிக்கைகள், ஆட்சேபனைகளை, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை ஏற்றுக்கொள்வோம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பீஹாரில் இருந்து குடி பெயர்ந்தவர்கள், இறந்து போனவர்கள், இரண்டு இடத்தில் பெயர் உள்ளவர்கள் என 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் கமிஷன், புதிய வரைவு வாக்காளர் பட்டியலை ஆக.,1ல் வெளியிட்டது.
இவ்வாறு போலியான வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ், ஆர்.ஜே.டி., உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து, நீக்கப்பட்ட வாக்காளர்கள், ஏதேனும் கோரிக்கைகள், ஆட்சேபனைகள் இருந்தால் செப்.,1க்குள் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்த காலக்கெடுவை நீட்டிக்க கோரி, ஆர்ஜேடி, ஏஐஎம்ஐஏம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தன. வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன், பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட வேண்டி உள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான கோரிக்கைகள், ஆட்சேபனைகளுக்கான காலக்கெடு பற்றி மட்டுமே இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில், 'பெயர் சேர்க்கும்படியான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் செப்.30க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டாலும் கூட பரிசீலிக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி வரை இவை ஏற்றுக்கொள்ளப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை செப்.8ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.