வீடு கட்டி தருவதாக 70,000 பேரை ஏமாற்றி ரூ.2,700 கோடி சுருட்டல்
வீடு கட்டி தருவதாக 70,000 பேரை ஏமாற்றி ரூ.2,700 கோடி சுருட்டல்
வீடு கட்டி தருவதாக 70,000 பேரை ஏமாற்றி ரூ.2,700 கோடி சுருட்டல்
ADDED : ஜூன் 16, 2025 05:49 AM

ஷிகார்: வீடு கட்டித் தருவதாக, 70,000 பேரை ஏமாற்றி 2,700 கோடி ரூபாய் சுருட்டிவிட்டு மாயமான இரு சகோதரர்கள் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தானின் ஷிகார் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பிஜரானி - ரன்வீர் பிஜரானி சகோதரர்கள். இதில், சுபாஷ் பிஜரானி ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து, 2014ல், குஜராத்தின் தோலேராவில் 30 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கினார்.
பெரும் லாபம்
அதைத் தொடர்ந்து, நெக்ஸா எவர்கிரீன் என்ற நிறுவனத்தை இருவரும் துவங்கினர். 'தோலேரா ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில், 805 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமான குடியிருப்புகள் உள்ளிட்டவை அடங்கிய, உலகத் தரம் வாய்ந்த நகரத்தை உருவாக்குவதாக விளம்பரம் செய்தனர்.
இதன்படி, பிளாட்டுகள், மனைகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட 70,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த திட்டத்தில் இணைந்து முதலீடு செய்தனர். பெரும் லாபம் தருவதாக அவர்களிடம் உறுதியளிக்கப்பட்டது.
இதற்காக சுபாஷ் - ரன்வீர் சகோதரர்கள், ஆயிரக்கணக்கான முகவர்களை நியமித்தனர். இதையடுத்து, நாடு முழுதும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து 2,676 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இதற்கு கமிஷனாக மட்டும் 1,500 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டது.
பின்னர், சகோதரர்கள் இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து சொகுசு கார்கள், சுரங்கங்கள், ஹோட்டல்கள், ஆமதாபாதில் அடுக்குமாடி குடியிருப்புகள், கோவாவில் 25 ரிசார்டுகள் என வாங்கி குவித்தனர்.
சோதனை
திரட்டப்பட்ட நிதியில் 250 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள பணத்தை 27 போலி நிறுவனங்களுக்கு அவர்கள் மாற்றினர். பின், நெக்ஸா பெயரில் துவங்கப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் கிளைகளை மூடிய சகோதரர்கள், உறுதியளித்தபடி முதலீட்டாளருக்கு பணம் எதுவும் கொடுக்காமல் மாயமாகினர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகாரளித்தனர். பணமோசடி என்பதால், வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சகோதரர்களுக்கு சொந்தமான 25 இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
ஜெய்ப்பூர், ஷிகார் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில், மோசடி தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்த விசாரணையையும் அவர்கள் துரிதப்படுத்தி உள்ளனர். தப்பியோடிய ரன்வீர் - சுபாஷ் சகோதரர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் விரைவில் பிடிபடுவர் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தோலேரா ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில், மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் பிரமாண்ட திட்டமாகும். அந்தப் பெயரைப் பயன்படுத்தி, இவர்கள் மோசடி செய்துள்ளனர்.