கடன் பிரச்னையால் விபரீதம் காருக்குள் 7 பேர் தற்கொலை
கடன் பிரச்னையால் விபரீதம் காருக்குள் 7 பேர் தற்கொலை
கடன் பிரச்னையால் விபரீதம் காருக்குள் 7 பேர் தற்கொலை
ADDED : மே 28, 2025 03:45 AM

சண்டிகர் : ஹரியானாவில், கடன் பிரச்னையால் கணவன் - மனைவி, மூன்று பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள செக்டார் 27 குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
மூச்சு விட சிரமம்
உத்தராகண்டின் டேராடூன் பதிவு எண்ணுடன் இருந்த அந்த காரை, அப்பகுதியை சேர்ந்த புனீத் ரானா என்பவர் பார்த்தார். கார் அருகே, நடைபாதையில் ஒருவர் அமர்ந்திருந்தார்.
சந்தேகப்படும்படியாக இருந்ததால், அந்த நபரிடம் புனீத் ரானா பேச்சு கொடுத்தார். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாகவும், ஹோட்டலில் அறை கிடைக்காததால், காரிலேயே துாங்குவதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
பேசும்போதே அவர் மூச்சுவிட சிரமப்படுவதை புனீத் ரானா கவனித்தார். கார் கண்ணாடி வழியாக பார்த்தபோது உள்ளே ஆறு பேர் மூச்சு பேச்சின்றி கிடந்தனர்.
அது குறித்து விசாரித்த போது, கடன் தொல்லை காரணமாக குடும்பத்தினர் அனைவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், தானும் இன்னும் ஐந்து நிமிடங்களில் இறந்துவிடுவேன் என்றும் அந்த நபர் தெரிவித்த நொடியே மயங்கி சரிந்தார்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மயங்கி கிடந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விஷம் அருந்தியதால் அவர்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. போலீசார் ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் பிரவீன் மிட்டல், 41, அவரது மனைவி மற்றும் 15 வயது மகன், 13 வயதான இரட்டையர் மகள், தாய் மற்றும் தந்தை என்பது தெரியவந்துள்ளது.
பல கோடி கடன்
கடன் பிரச்னையே தற்கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து பிரவீன் மிட்டலின் உறவினர் சந்தீப் அகர்வால் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இரும்பு கழிவுகளுக்கான தொழிற்சாலையை ஹிமாச்சல பிரதேசத்தில் பிரவீன் துவங்கினார். வியாபாரத்திற்காக பல கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாததால், அந்த தொழிற்சாலையை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனால் விரக்தி அடைந்த பிரவீன், குடும்பத்துடன் உத்தராகண்டின் டேராடூனுக்கு குடிபெயர்ந்தார். அப்பாது, 20 கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு கடன் இருந்தது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக யாருடனும் அவர் தொடர்பில் இல்லை. ஓராண்டுக்கு முன் ஹரியானாவின் பஞ்ச்குலாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அவர் டாக்சி ஓட்டி பிழைத்து வந்த நிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.