உலக தரவரிசையில் 54 இந்திய கல்வி நிறுவனங்கள்: 180ல் சென்னை ஐ.ஐ.டி.,
உலக தரவரிசையில் 54 இந்திய கல்வி நிறுவனங்கள்: 180ல் சென்னை ஐ.ஐ.டி.,
உலக தரவரிசையில் 54 இந்திய கல்வி நிறுவனங்கள்: 180ல் சென்னை ஐ.ஐ.டி.,
ADDED : ஜூன் 20, 2025 01:05 AM
புதுடில்லி: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்த க்யூ.எஸ்., எனப்படும், 'குவாக்கரெல்லி சைமன்ட்ஸ்' என்ற தனியார் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.
பட்டியல்
பல்கலைகளின் முக்கிய பணிகள், கல்வியாண்டு தேர்ச்சி விகிதம், நற்பெயர், சர்வதேச ஆசிரியர்கள் விகிதம், சர்வதேச மாணவர்கள் விகிதம் உள்ளிட்ட ஆறு செயல்திறன் குறியீடுகளுடன் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது.
அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான உலக பல்கலை தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில், உலகம் முழுதும் உள்ள 500 பல்கலைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உலகளவில், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் 14-வது ஆண்டாக பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து லண்டன் இம்பீரியல் கல்லுாரி, ஸ்டான்போர்ட் பல்கலை, ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஹார்வர்டு பல்கலை ஆகியவை உள்ளன.
இந்த தரவரிசைப் பட்டியலில், இதுவரை இல்லாத அளவில் இந்தியக் கல்வி நிறுவனங்கள் அதிகளவில் இடம்பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு 46 இந்தியக் கல்வி நிறுவனங்களும், அதற்கு முந்தைய ஆண்டில் 45 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்த நிலையில், இந்த ஆண்டு 54 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.,யின் டில்லி கிளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 இடங்கள் முன்னேறி, 123வது இடத்தை பிடித்துள்ளது.
ஐ.ஐ.டி., மும்பை, இந்தாண்டு 129வது இடத்திற்கு சரிந்தாலும், உலகளவில், 130 இடங்களுக்குள் தன் இருப்பை தக்கவைத்துள்ளது.
நான்காவது இடம்
சென்னை ஐ.ஐ.டி., இந்தாண்டு 180ஆவது இடத்தை பிடித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலை, 465வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 192 கல்வி நிறுவனங்கள், பிரிட்டனைச் சேர்ந்த 90 கல்வி நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்த 72 கல்வி நிறுவனங்களை அடுத்து, 54 கல்வி நிறுவனங்களுடன் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.