கடத்தல்காரர் குடும்பத்தினரிடம் லஞ்சம் வாங்கிய 4 போலீஸ் அதிகாரிகள் கைது
கடத்தல்காரர் குடும்பத்தினரிடம் லஞ்சம் வாங்கிய 4 போலீஸ் அதிகாரிகள் கைது
கடத்தல்காரர் குடும்பத்தினரிடம் லஞ்சம் வாங்கிய 4 போலீஸ் அதிகாரிகள் கைது
ADDED : மே 24, 2025 12:11 AM
பக்வாரா:பஞ்சாபில், போதைப் பொருள் கடத்தல்காரரின் குடும்பத்தினரிடம் லஞ்சம் வாங்கிய, நான்கு போலீஸ் அதிகாரிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தில் தீவிர போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 82 நாட்களாக நடத்திய அதிரடி சோதனையில் இதுவரை, 12,650 போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பக்வாரா குற்றப் புலனாய்வுப் பிரிவு சப்- - இன்ஸ்பெக்டர் பிஸ்மன் சாஹி, உதவி சப்- - இன்ஸ்பெக்டர்கள் ஜஸ்விந்தர் சிங், நிர்மல் குமார் மற்றும் தலைமை போலீஸ்காரர் ஜக்ரூப் சிங் ஆகிய நான்கு பேரும், போதைப்பொருள் கடத்தல்காரர் ஹனி என்பவரை விடுவித்து, அவரது குடும்பத்தினரிடமிருந்து 2.5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய, ஜலந்தர் டி.ஐ.ஜி., நவீன் சிங்லா, நான்கு பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர்.
டி.ஐ.ஜி., நவீன் சிங்லா, “ஊழலைப் பொறுத்துக்கொள்ள முடியாது. போலீஸ் துறையில் எந்த ஒரு கருப்பு ஆடும் தப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிக்கு பங்கிருந்தால் அவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடக்கிறது,”என்றார்.
கைது செய்யப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகளும், பக்வாரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு பேரையும் காவலில் எடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.