ஒப்பந்த முறையில் பணியாற்றிய 38 'மாஜி' அதிகாரிகள்... நீக்கம்! நிதி நெருக்கடியை குறைக்க கர்நாடக அரசு அதிரடி முடிவு
ஒப்பந்த முறையில் பணியாற்றிய 38 'மாஜி' அதிகாரிகள்... நீக்கம்! நிதி நெருக்கடியை குறைக்க கர்நாடக அரசு அதிரடி முடிவு
ஒப்பந்த முறையில் பணியாற்றிய 38 'மாஜி' அதிகாரிகள்... நீக்கம்! நிதி நெருக்கடியை குறைக்க கர்நாடக அரசு அதிரடி முடிவு
ADDED : ஜூன் 22, 2024 04:37 AM
பெங்களூரு : கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 38 ஓய்வு பெற்ற அதிகாரிகள், நேற்று ஒரே நாளில் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். நிதி நெருக்கடியை குறைக்கும் வகையில், முதல்வர் சித்தராமையா உத்தரவுப்படி, கர்நாடக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அரசு துறைகளில் ஓய்வு பெறும் அதிகாரிகள், ஊழியர்கள், நிர்வாக வசதிக்காக ஒப்பந்த அடிப்படையில், மீண்டும் பணியில் அமர்த்தப்படுபடுவர். ஓராண்டு முதல், ஐந்தாண்டு வரை அவர்கள் பணியில் இருப்பர்.
இரட்டை வருமானம்
சிலர், ஆளுங்கட்சியினருடன் தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, ஆண்டுக்காண்டு பணியை நீட்டித்து கொள்வர்.
உயர் அதிகாரிகள் மறுத்தாலும், அரசியல் தலைவர்களின் சிபாரிசு கடிதங்களை வழங்கி, தங்களை பணியில் இருக்கும்படி செய்து கொள்வதுண்டு. ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல், அரசு தரப்பில் அப்படியே ஓய்வின்றி பணியில் நீடிக்கப்பட்டால், சம்பளம் மட்டுமே கிடைக்கும்.
ஆனால், உயர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற சில அதிகாரிகள், 30,000 முதல், 2 லட்சம் ரூபாய்க்கும் அதிக சம்பளம் பெறுகின்றனர். ஒரு பக்கம் ஓய்வூதியம், மறுபக்கம் சம்பளம் என இரட்டை வருமானம் பெறுகின்றனர்.
இதனால், அரசின் கஜானாவுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் அரசு தரப்பில் எடுக்கப்படுகின்றன.
தேவையற்ற செலவை குறைத்து, சிக்கனத்தை கடைப்பிடிக்கும்படி முதல்வர் சித்தராமையா, கடந்த ஜனவரி 9ம் தேதி மாநில தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயலுக்கு உத்தரவிட்டிருந்தார்.
வருவாய், கலால், பொதுப்பணி, ஹிந்து சமய அறநிலையம், நிதி, கூட்டுறவு, நிர்வாக சீர்திருத்தம், வணிகம், பிற்படுத்தப்பட்டோர் நலன், மின்சாரம், உணவு, சுகாதாரம், நீர்ப்பாசனம், தோட்டக்கலை அரசின் 20க்கும் அதிகமான துறைகளில், 370க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவது கணக்கெடுப்பில் தெரியவந்தது.
மூன்றாம் முறை
இப்படி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் அதிகாரிகளை, பணியில் இருந்து நீக்கி, வீட்டுக்கு அனுப்பும்படி, அனைத்து துறை முதன்மை செயலர்களுக்கும், தலைமை செயலர் ஜனவரி 23, பிப்ரவரி 22ம் தேதி சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். ஆனாலும், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, உடனடியாக அவர்களை பணியில் இருந்து நீக்கும்படி, சில நாட்களுக்கு முன், மூன்றாவது முறையாக, தலைமை செயலர் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, முதல் கட்டமாக, கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில், பணிபுரிந்து வந்த 38 ஓய்வு பெற்ற அதிகாரிகள், நேற்று ஒரே நாளில் அதிரடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து, வெவ்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களையும் வீட்டுக்கு அனுப்புவதற்கு, பட்டியல் தயார் நிலையில் உள்ளது. ஓரிரு நாளில் அனைவரும் வீட்டுக்கு செல்வது உறுதி என்றே சொல்லப்படுகிறது. இதன் மூலம், அரசுக்கு பெரும் செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.