Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள் பலி

புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள் பலி

புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள் பலி

புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள் பலி

ADDED : ஜூன் 30, 2025 01:05 AM


Google News
புரி: ஒடிஷாவில் உள்ள புரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, இரு பெண்கள் உட்பட மூன்று பக்தர்கள் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஒடிஷாவில் உள்ள கடற்கரை நகரமான புரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் ஜெகன்னாதர் ரத யாத்திரை புகழ்பெற்றது. கடந்த 27ம் தேதி துவங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இந்த நிலையில் முதல்நாள் ரத யாத்திரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சிலர் மயக்கமடைந்ததால், ரத யாத்திரை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் ஜெகன்னாதர் கோவிலில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள குந்திச்சா கோவில் அருகே, ஹிந்துக் கடவுள்களான ஜெகன்னாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் மூன்று ரதங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

திரைவிலக்கும் காட்சியை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது திடீரென, பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு லாரிகள் அங்கு வந்தன. கூட்டத்துக்குள் புகுந்து செல்ல லாரிகள் முயன்றதால், நெரிசல் அதிகமானது.

மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து செல்ல முயன்றனர். இதில் நெரிசலில் சிக்கி, குந்த்ரா மாவட்டத்தை சேர்ந்த பிரபாதி தாஸ், 42, பசந்தி சாகு, 36, ஆகிய இரண்டு பெண்கள் மற்றும் முதியவர் பிரேமகாந்த் முகந்தி, 80, என மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.

அவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆறு பேர் இன்னும் மயக்க நிலையிலேயே உள்ளனர். பலியான மூவர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உடல்களை புரியில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கலெக்டர் சித்தார்த் மற்றும் போலீஸ் எஸ்.பி., வினித் அகர்வால் ஆகியோர் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதுதவிர போலீஸ் துணை கமிஷனர் விஸ்ணுபதி மற்றும் போலீஸ் அதிகாரி அஜய்பதி ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ள பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மோகன் மஜி, விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நெரிசலில் இறந்த மூவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் மற்றும் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், மாநில அரசு மீது அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மன்னிப்பு கோரிய முதல்வர்

மாநில முதல்வர் மோகன் சரண் மஜி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மகாபிரபு ஜெகன்னாதரை தரிசிக்கும் ஆர்வத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்காக ஜெகன்னாதர் பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவிக்கிறேன். அவர்களது உறவினர்களுக்கு இதை தாங்கும் சக்தியை கடவுள் அளிப்பார் என நம்புகிறேன். விழா பாதுகாப்பு குறைபாடு குறித்து உடனடியாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us