பெங்களூரு ஏர்போர்ட்டில் 24 மணி நேர 'சார்ஜிங்' மையம்
பெங்களூரு ஏர்போர்ட்டில் 24 மணி நேர 'சார்ஜிங்' மையம்
பெங்களூரு ஏர்போர்ட்டில் 24 மணி நேர 'சார்ஜிங்' மையம்
ADDED : ஜூன் 04, 2025 07:23 AM
பெங்களூரு, ஜூன் 4-
கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில், 'எலக்ட்ரிக்' வாகனங்களை சார்ஜ் செய்ய, நாட்டிலேயே முதன்முறையாக, 24 மணி நேரம் இயங்கும், 'சார்ஜிங் ஸ்டேஷன்' திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரில் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு, தினமும் ஏராளமான எலக்ட்ரிக் வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதையடுத்து, கர்நாடக அரசின், 'பெஸ்காம்' மற்றும் சர்வதேச கூட்டமைப்புக்கான ஜெர்மன் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து அமைக்கப்பட்ட சார்ஜிங் மையத்தை மாநில எரிசக்தி துறை அமைச்சர் ஜார்ஜ் நேற்று திறந்து வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
நம் நாட்டிலேயே, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய முதல் சார்ஜிங் மையமாக இது திகழ்கிறது. இந்த மையம், ஏற்கனவே கார்களில் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, சோலார் மின் சக்தி வாயிலாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 45 கிலோ வாட் திறன் உடைய சோலார் மின்சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், மறுசுழற்சி பேட்டரிகள் வாயிலாக மணிக்கு, 100 கிலோ வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதி உள்ளது. இதன்படி, ஒரே நேரத்தில் 23 வாகனங்கள், சார்ஜ் செய்யக்கூடிய வசதி உள்ளது. இதில், 18 வாகனங்களுக்கு வேகமாக சார்ஜ் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவில் தற்போது 5,880 எலக்ட்ரிக் சார்ஜிங் மையங்கள் இயங்குகின்றன. இதில், 4,462 சார்ஜிங் மையங்கள் பெங்களூரின் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ளன.