நிதி அமைச்சக அதிகாரி பலி பெண்ணுக்கு 2 நாள் காவல்
நிதி அமைச்சக அதிகாரி பலி பெண்ணுக்கு 2 நாள் காவல்
நிதி அமைச்சக அதிகாரி பலி பெண்ணுக்கு 2 நாள் காவல்
ADDED : செப் 17, 2025 02:24 AM
புதுடில்லி:புதுடில்லி தவுலா குவான் அருகே, பைக் மீது பி.எம்.டபிள்யூ., கார் மோதி உயிரிழந்த மத்திய நிதி அமைச்சக மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங்,52, உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
விபத்து ஏற்படுத்திய பெண், மது அருந்தியிருந்தாரா என பரிசோதனை நடத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சகத்தில் பொருளாதார விவகாரங்கள் துறை துணைச் செயலராக இருந்தவர் நவ்ஜோத் சிங், 57. பங்களா சாஹிப் குருத்வாராவுக்கு மனைவி சந்தீப் கவுருடன் சென்ற சிங், 14ம் தேதி மதியம் பைக்கில் டில்லி திரும்பினார்.
டில்லி கன்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரிங் ரோட்டில், பின்னால் வந்த பி.எம்.டபிள்யு., சொகுசு கார் நவ்ஜோத் தம்பதி சென்ற பைக் மீது மோதியது.
துாக்கி வீசப்பட்ட நவ்ஜோத் சிங் மற்றும் சந்தீப் கவுர் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் காரும் நொறுங்கி கவிழ்ந்தது.
காரை ஓட்டி வந்த ககன் பிரீத் மற்றும் அவரது கணவர் பரிஷத் ஆகிய இருவரும் லேசான காயம் அடைந்த நிலையில், நவ்ஜோத் சிங் மற்றும் அவரது மனைவி சந்தீப் கவுர் ஆகிய இருவரையும் ஒரு வேனில் ஏற்றி, 19 கி.மீ., துாரத்தில் உள்ள தங்களுக்கு தெரிந்த, 'நியு லைப்' மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் நவ்ஜோத் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ககன்ப்ரீத்தை கைது செய்தனர்.
விபத்து நடந்த போது ககன் பிரீத் மது அருந்தி இருந்தாரா என, அரசு மருத்துவமனையில் நேற்று பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர் மது அருந்தவில்லை என தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணை நடத்திய நீதிபதி, இரண்டு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ககன் பிரீத்துக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. ககன் பிரீத் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த நவ்ஜோத் சிங் உடல், உடற்கூறு ஆய்வுக்குப் பின், குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் உடல் தகனம் செய்யப்பட்டது.