பயணியரை தாக்கி கொள்ளை 2 ஆட்டோ டிரைவர்கள் கைது
பயணியரை தாக்கி கொள்ளை 2 ஆட்டோ டிரைவர்கள் கைது
பயணியரை தாக்கி கொள்ளை 2 ஆட்டோ டிரைவர்கள் கைது
ADDED : மே 16, 2025 08:37 PM
புதுடில்லி:பயணியை சரமாரியாக தாக்கி, மயக்கம் அடையச் செய்து, கொள்ளையடித்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.
பழைய டில்லி ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுபவர்கள் ராஜா, 27, மற்றும் சோனு,34. கடந்த 10ம் தேதி அதிகாலை 4:45 மணிக்கு, ஆசாத்பூர் லால் பாக் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், பழைய டில்லி ரயில் நிலையத்திலிருந்து ஆசாத்பூருக்கு ராஜாவின் ஆட்டோவில் சென்றார். சிறிது தூரத்திலேயே சோனு ஆட்டோவில் ஏறிக் கொண்டார்.
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தவுடன் வண்டியை நிறுத்தி, இருவரும் சேர்ந்து ரஞ்சித் குமாரை சரமாரியாகத் தாக்கினர். அவர் மயங்கி விழுந்ததும் மொபைல் போன், பணப்பை, ஆவணங்கள் மற்றும் பயணப் பை ஆகியவற்றுடன் ஆட்டோவில் தப்பிச் சென்றனர். ரஞ்சித் குமாரை சாலை ஓரத்தில் படுக்க வைத்து விட்டுச் சென்று விட்டனர்.
மயக்கம் தெளிந்தவுடன் ரஞ்சித் குமார், போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
குற்றவாளிகளான ஆட்டோ டிரைவர் வெல்கம் காலனியைச் சேர்ந்த ராஜா, காஜியாபாத் லோனியைச் சேர்ந்த சோனு ஆகிய இருவரையும் அடையாளம் கண்டுபிடித்து, 14ம் தேதி கைது செய்தனர்.
ஆட்டோ மற்றும் கீதா காலனி மேம்பாலம் அருகே மற்றொரு கொள்ளையுடன் தொடர்புள்ள மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜா மீது 14 வழக்குகளும், சோனு மீது 11 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இருவரின் மற்றொரு கூட்டாளி தீபக் என்ற கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.