ரூ.2.9 லட்சம் கோடி மத்திய நிதியை வீணடித்த 19 மாநிலங்கள்
ரூ.2.9 லட்சம் கோடி மத்திய நிதியை வீணடித்த 19 மாநிலங்கள்
ரூ.2.9 லட்சம் கோடி மத்திய நிதியை வீணடித்த 19 மாநிலங்கள்
ADDED : மார் 22, 2025 04:05 AM

புதுடில்லி : உள்கட்டமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியில், 2.9 லட்சம் கோடி ரூபாய் நிதியை, 19 மாநிலங்கள் செலவு செய்யாமல் வீணடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டம், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு, 10.1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், 28 சதவீத நிதியை மாநிலங்கள் செலவு செய்யாமல் அப்படியே வைத்துள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது, 2.9 லட்சம் கோடி ரூபாய் நிதியை, 19 மாநிலங்கள் வீணடித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் நடப்பு நிதியாண்டு முடிவுக்கு வந்ததும், இந்த வீணடிக்கப்பட்ட நிதி, மீண்டும் மத்திய அரசின் கணக்குக்கு சென்றுவிடும்.
மூலதன செலவினத் தொகையை வீணடித்த மாநிலங்களில், ஐந்து மாநிலங்கள், 50 சதவீதத்துக்கும் அதிகமான நிதியை அப்படியே வைத்துள்ளன. அந்த வரிசையில், மஹாராஷ்டிரா - 59, பீஹார் - 58, ஆந்திரா - 55, உத்தர பிரதேசம் - 52, மேற்கு வங்கம் - 52 சதவீத நிதியை செலவு செய்யாமல் வைத்துள்ளன.
இதில், மேற்கு வங்கத்தை தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இம்மாத இறுதியுடன் முடிவுக்கு வரும், 2024 - 25ம் நிதியாண்டில், மாநிலங்களுக்கு, 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா, 1.1 லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு ஒதுக்கியது.
அதில், 2025 ஜனவரி இறுதி வரை, 29,850 கோடி ரூபாய் கடனை மட்டுமே மாநிலங்கள் பெற்றுள்ளன. மீதியுள்ள கடன் தொகை பெறப்படாமல் அப்படியே உள்ளதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.