கலவர வழக்கில் கைதான 17 பேர் 10 ஆண்டுகளுக்கு பின் விடுதலை
கலவர வழக்கில் கைதான 17 பேர் 10 ஆண்டுகளுக்கு பின் விடுதலை
கலவர வழக்கில் கைதான 17 பேர் 10 ஆண்டுகளுக்கு பின் விடுதலை
ADDED : செப் 15, 2025 03:32 AM

தானே: மஹாராஷ்டிராவில், 2015ல் நடந்த கலவர வழக்கில் கைதான 17 பேர், போதிய ஆதாரங்கள் இல்லாததால், 10 ஆண்டுகளுக்கு பின் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள திவா ரயில்வே ஸ்டேஷனில், 2015 ஜன., 2ல், ஆயுதமேந்திய மர்ம கும்பல் பொது சொத்துகளை சேதப்படுத்தியதுடன், இதை கட்டுப்படுத்த முயன்ற போலீசாரையும் தாக்கியது. இதில் பல போலீசார் காயமடைந்தனர்.
இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், 19 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு, தானே மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், கைதான இருவர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கூடுதல் அமர்வு நீதிபதி வாசுதா போசலே பிறப்பித்த உத்தரவு:
வழக்கு விசாரணையின் போது, அனைத்து அரசு தரப்பு சாட்சிகளும் ஒரே மாதிரியாக பதிலளித்தன.
ஒரு சாட்சி கூட, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரை கூட அடையாளம் காட்டவில்லை. காயமடைந்த போலீசாரின் மருத்துவ அறிக்கைகளில் சிறிய காயங்கள் மட்டுமே இருந்ததாக கூறப்பட்டுள்ளன. அவை, கீழே விழுந்ததால் கூட ஏற்பட்டிருக்கலாம்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், பொதுவான நோக்கத்துடன் சட்ட விரோதமாக கூடியதை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.
போதிய ஆதாரங்கள் இல்லாததால், 17 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.