16 குழந்தை தொழிலாளர்கள் குஜராத்தில் பத்திரமாக மீட்பு
16 குழந்தை தொழிலாளர்கள் குஜராத்தில் பத்திரமாக மீட்பு
16 குழந்தை தொழிலாளர்கள் குஜராத்தில் பத்திரமாக மீட்பு
ADDED : ஜூன் 10, 2025 12:36 AM
ராஜ்கோட் : குஜராத்தில், கவரிங் நகை செய்யும் ஆலையில் பணியாற்றிய 16 குழந்தை தொழிலாளர்கள் உட்பட 21 பேரை போலீசார் நேற்று மீட்டனர்.
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தின் மோர்பி சாலை பகுதியில் உள்ள, 'கவரிங்' நகை தயாரிக்கும் ஆலையில், குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, போலீசார் அந்த ஆலையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு பணியாற்றிய 16 குழந்தை தொழிலாளர்கள் உட்பட 21 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும், சட்ட விரோதமாக குழந்தைகளை பணியில் அமர்த்தியதோடு, அவர்களை அடித்து துன்புறுத்திய ஆலையின் உரிமையாளரான, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அஜித் மவுலா அஜ்மத் மவுலா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் வறுமையில் வாடும் ஏழை மக்களிடம், அவர்களின் குழந்தைகளுக்கு வேலை தருவதாகக் கூறி, ராஜ்கோட்டுக்கு அஜித் மவுலா அழைத்து வந்துள்ளார். கவரிங் நகைகளை செய்யும் தனக்கு சொந்தமான இரண்டு ஆலைகளில், அவர்களை பணியமர்த்தி உள்ளார்.
ஒரு நாளைக்கு 10 மணி நேரம், சிறுவர் - சிறுமியரை அஜித் மவுலா வேலை வாங்கியுள்ளார். சரியாக வேலை செய்யாதவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அடித்து துன்புறுத்தி உள்ளார்; சித்ரவதையும் செய்துஉள்ளார்.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கவரிங் நகை ஆலையில் பணியாற்றிய 16 சிறுவர் - சிறுமியர், 18 - 22 வயதுக்குப்பட்ட ஐந்து பேரை மீட்டுள்ளோம். அனைவருமே, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பாக, அஜித் மவுலாவை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.