பெரியாறு புலிகள் காப்பகத்தில் புதிதாக 12 வகை உயிரினங்கள்
பெரியாறு புலிகள் காப்பகத்தில் புதிதாக 12 வகை உயிரினங்கள்
பெரியாறு புலிகள் காப்பகத்தில் புதிதாக 12 வகை உயிரினங்கள்
ADDED : செப் 23, 2025 06:24 AM

மூணாறு; கேரளா இடுக்கி மாவட்டம் பெரியாறு புலிகள் காப்பகத்தில் 12 புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டன.
அங்கு கேரள வனத்துறை, பெரியாறு புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட திருவாங்கூர் இயற்கை வரலாற்று சங்கத்தின் உதவியுடன் வருடாந்திர வன உயிரின கணக்கெடுப்பு செப்.11 முதல் செப்.14 வரை நடந்தது.
அதில் புதிதாக 8 வண்ணத்துப்பூச்சிகள், 2 பறவைகள், 2 தும்பிகள் கண்டறியப்பட்டன. அதன்படி மொத்தம் 207 வகை வண்ணத்துப் பூச்சிகள், 71 வகை தும்பிகள், 40க்கும் மேற்பட்ட வகை எறும்புகள், 15 வகை ஊர்வனங்கள், 6 வகை வண்டுகள், மாநில பறவையான இருவாட்சி உட்பட பல்வேறு பறவைகள், புலி, சிறுத்தை, காட்டு நாய், காட்டு மாடு, யானை உட்பட பெரிய பாலுாட்டிகள், பழுப்பு நிற கீரி, வரியிட்ட கழுத்து கீரி, சிறிய இந்திய புணுகு பூனை, நீர் நாய், இந்திய முள்ளம்பன்றி ஆகியவை உள்ளதாக தெரியவந்தது.
கணக்கெடுப்பின் நிறைவு விழாவில் பெரியாறு கள இயக்குனர் பிரமோத், உதவி கள இயக்குனர் லெட்சுமி, உதவி இயக்குனர் சாஜூ பங்கேற்றனர்.
புதிதாக கண்டறியபட்டவை
வண்ணத்துப்பூச்சி: சஹ்யாத்ரி கிராஸ் எல்லோ, பிளைன் ஆரஞ்ச் டிப், சஹ்யாத்ரி எல்லோ ஜாக் ஷெய்லர், லங்கன் பிளம் ஜூடி, பிளைன் பான் டேட் ஆல், மோன்டேன் ஹெட்ஜ் ஹோப்பர், சஹ்யாத்ரி ஸ்மால் பாம்போ ப், இந்தியன் டார்ட்.
தும்பிகள்: சஹ்யாத்ரி டோரன்ட் ஹோக், கூர்க் டோரன்ட் ஹோக்.
பறவைகள்: கருங்குருவி, வெண்தொண்டை பூங்குருவி