Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ நீங்கள் ஒரு பெண்; உங்களுக்கு எதுவும் தெரியாது: நிதீஷ்

நீங்கள் ஒரு பெண்; உங்களுக்கு எதுவும் தெரியாது: நிதீஷ்

நீங்கள் ஒரு பெண்; உங்களுக்கு எதுவும் தெரியாது: நிதீஷ்

நீங்கள் ஒரு பெண்; உங்களுக்கு எதுவும் தெரியாது: நிதீஷ்

ADDED : ஜூலை 25, 2024 02:32 AM


Google News
Latest Tamil News
பாட்னா :பீஹார் சட்டசபையில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் கடும் கோபமடைந்த முதல்வர் நிதீஷ் குமார், “நீங்கள் ஒரு பெண். உங்களுக்கு எதுவும் தெரியாது,” என, ராஷ்ட்ரீய ஜனதா தள பெண் எம்.எல்.ஏ., ரேகா பஸ்வானை நோக்கி ஆவேசமாகப் பேசியது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

நேற்று சபை கூடியதும், முதல்வர் நிதீஷ் குமார் பேச எழுந்தார். அப்போது, இட ஒதுக்கீடு, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

தன்னை பேச விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், முதல்வர் நிதீஷ் குமார் கடும் கோபமடைந்தார். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள பெண் எம்.எல்.ஏ., ரேகா பஸ்வான் கேள்வி கேட்க எழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்து முதல்வர் நிதீஷ் குமார் பேசியதாவது:

என் அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக நிறைய செய்துள்ளது. அதனால் தான், இன்று உங்களால் இவ்வளவு பேச முடிகிறது. நீங்கள் ஒரு பெண். உங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்களோ அல்லது உங்கள் தரப்போ பெண்களுக்கு எதுவுமே செய்யவில்லை. பாட்னா உயர் நீதிமன்றம் ஜாதிவாரி இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளோம். இதில் நல்ல முடிவு வரும் என, எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், சபையில் கூச்சல், குழப்பம் அதிகரித்தது.

இது குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''பெண்களுக்கு எதிராக மலிவான, நாகரீகமற்ற மற்றும் கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிடுவது, முதல்வர் நிதீஷ் குமாருக்கு வழக்கமாகி விட்டது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us