ADDED : ஜூன் 15, 2024 02:15 AM

பெங்களூரு, : 'போக்சோ' வழக்கில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக, நான்கு முறை இருந்தவர் பா.ஜ.,வின் எடியூரப்பா, 81.
மமதா, 55 என்ற பெண், தன் 17 வயது மகளிடம் எடியூரப்பா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்படி, கடந்த மார்ச் 14ல் எடியூரப்பா மீது, 'போக்சோ' வழக்கு பதிவானது. விசாரணையில், மமதா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், இதுபோல பல முக்கிய பிரமுகர்கள் மீது புகார் அளித்திருப்பதும் தெரிந்தது.
இதற்கிடையில், புகார் அளித்த மமதா, புற்றுநோயால் மே 27ல் உயிரிழந்தார். இதனால், தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு செய்தார்.
ஆனால், புகார் அளித்து பல மாதங்கள் ஆகியும், எடியூரப்பா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, மமதாவின் சகோதரர் உயர் நீதிமன்றத்தில், 'ரிட்' மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியும், எடியூரப்பா ஆஜராகாததால், கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கும்படி, சி.ஐ.டி., போலீசார் தரப்பில், போக்சோ வழக்குகளை விசாரிக்கும் கீழமை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றமும் எடியூரப்பா வுக்கு கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. தற்போது, டில்லியில் உள்ள அவரை கைது செய்ய, சி.ஐ.டி., அதிகாரிகள் விரைந்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டும், கைது செய்ய தடை கோரியும், உயர் நீதிமன்றத்தில், எடியூரப்பா தரப்பில் நேற்று இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களுடன், ஏற்கனவே வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு உட்பட மூன்று மனுக்களையும் இணைத்து, நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித், நேற்று விசாரித்தார்.
அப்போது, 'மார்ச் 14ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜூன் 12ம் தேதி தான் சம்மன் வழங்கப்பட்டது. அதுவரை போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை கைது செய்ய, அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது. ஜூன் 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராவார்' என, எடியூரப்பா தரப்பு வழக்கறிஞர் நாகேஷ் வாதாடினார்.
நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித், 'கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்கள் எடியூரப்பாவை கைது செய்யக் கூடாது' என உத்தரவிட்டார்.