'போக்சோ' வழக்கில் ஆஜராக எடியூரப்பாவுக்கு விலக்கு
'போக்சோ' வழக்கில் ஆஜராக எடியூரப்பாவுக்கு விலக்கு
'போக்சோ' வழக்கில் ஆஜராக எடியூரப்பாவுக்கு விலக்கு
ADDED : ஜூலை 13, 2024 07:20 AM

பெங்களூரு : போக்சோ வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
பெங்களூரு, டாலர்ஸ் காலனியில் உள்ள வீட்டுக்கு, மார்ச் 14ல் உதவி கேட்டு சென்றபோது, 17 வயது மகளை முன்னாள் முதல்வர் எடியூரப்பா பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் பெண்ணொருவர் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், நடப்பாண்டு மார்ச் 14ல், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி சி.ஐ.டி., அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். எடியூரப்பாவும் ஆஜராகி, விளக்கம் அளித்திருந்தார்.
வழக்கு குறித்து பெங்களூரின் ஒன்றாவது விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்றமும் ஜூலை 15ல் விசாரணைக்கு ஆஜராகும்படி, எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பியது.
விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரியும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்தார்.
மனு மீது நேற்று விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து, எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது. வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணையை, ஜூலை 26க்கு தள்ளி வைத்தது.