கொலையாளிகள் வேறு சிறைக்கு மாற்றப்படுவரா?
கொலையாளிகள் வேறு சிறைக்கு மாற்றப்படுவரா?
கொலையாளிகள் வேறு சிறைக்கு மாற்றப்படுவரா?
ADDED : ஜூன் 24, 2024 04:38 AM
பெங்களூரு, : ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி இருப்பவர்களை வேறு சிறைக்கு மாற்ற கோரி, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33 கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 17 பேர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 17 பேரும் ஒரே சிறையில் இருந்தால், சாட்சிகளை அழிப்பதற்கு, சிறைக்குள் இருந்து திட்டம் தீட்ட வாய்ப்பு இருப்பதால், கொலையாளிகளை வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன குமார், பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது. விசாரணையின் போது, அரசு தரப்பு கோரிக்கையை, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், கொலையாளிகள் மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் கொலை வழக்கில் கைதான 'ஏ8' ரவி என்பவர், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
மனுவில், 'சித்ரதுர்காவிலிருந்து ரேணுகாசாமியை, பெங்களூருக்கு எனது காரில் அழைத்து வந்தேன். வேறு எந்த தவறும் செய்யவில்லை' என்று கூறியுள்ளார். இந்த மனு மீது எப்போது விசாரணை நடக்கும் என தெரியவில்லை.
கொலையான ரேணுகாசாமி குடும்பத்தினரை, தர்ஷன் குடும்பத்தினர் தொடர்பு கொண்டு, கொலை வழக்கை வாபஸ் பெறும்படி கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக ஒரு வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதமானால், அதை காரணம் காண்பித்து, சிறையிலிருந்து ஜாமினில் வெளியில் வரலாம்.
தர்ஷனுக்கு அரசியல்வாதிகளின் தொடர்பு இருப்பதால், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவிடாமல் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வழக்கை, கர்நாடக அரசு தீவிரமாக எடுத்துள்ளது. மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரிஷ், விஜயநகர் உதவி போலீஸ் கமிஷனர் சந்தன் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சாட்சியங்களை சேகரிக்கும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தர்ஷனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர். இந்த வழக்கில் தர்ஷனுக்கு ஜாமின் கிடைக்க ஆறு மாதங்கள் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் தர்ஷன் உட்பட நான்கு பேர் நேற்று முன்தினம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது, அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன குமார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிமாண்ட் விண்ணப்பத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது.
நாட்டின் சட்டத்தின் மீது இவர்களுக்கு பயமில்லை. 'ஏ1' பவித்ரா கவுடா துாண்டுதலால், கொலையை செய்துஉள்ளனர்.
கொலை செய்வதே, ஒரே நோக்கமாக கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் சாட்சிகளை, தர்ஷனின் ஆதரவாளர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவாகிஉள்ளது.
என்னென்ன வாய்ப்பு?
இந்நிலையில் சிறையில் உள்ள தர்ஷன் வெளியே வருவதற்கு, என்னென்ன வழிகளை கையாளலாம் என்று சொல்லப்படுகிறது.
l தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
l ஜாமின் கேட்டு பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மனு செய்யலாம். இந்த மனு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பு உள்ளது.