செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வருமா சஞ்சய் காந்தி மருத்துவமனையில் மையம்?
செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வருமா சஞ்சய் காந்தி மருத்துவமனையில் மையம்?
செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வருமா சஞ்சய் காந்தி மருத்துவமனையில் மையம்?
ADDED : ஜூலை 18, 2024 08:27 PM
மங்கோல்புரி:சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் புதிய விபத்து சிகிச்சை மையம் வரும் செப்டம்பரில் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.
மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் 117.78 கோடியில் புதிய விபத்து சிகிச்சை மையம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் 2019 செப்டம்பரில் துவங்கின. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கல் நாட்டினார். அனைத்துப் பணிகளும் முடிந்து, 2021ல் சிகிச்சை மையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமாகின. இதனால் அனைத்துப் பணிகளையும் 2022க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் தாமதம் தொடர்ந்தது.
கடந்த ஆண்டு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டுமானப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதை கண்டறிந்தார். அதன்பிறகு பணிகள் வேகமெடுத்தன.
இதையடுத்து, வரும் 31க்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விடும் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக அதிர்ச்சி மையத்தின் கட்டுமானப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. மரச்சாமான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் அதை சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய அவசர சிகிச்சை மையம், 39 அவசர சிகிச்சை படுக்கைகள் உட்பட 362 படுக்கைகளுடன், நாட்டின் மிகப்பெரிய விபத்து சிகிச்சை மையமாக அமையும். இங்கு ஆறு அதிநவீன அறுவைச்சிகிச்சை மையம் அமைக்கப்படும். இம்மாத இறுதிக்குள் கட்டடம் எங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை ஏற்பாடு செய்ய ஒரு மாதம் ஆகும். இதனால் மையம் செப்டம்பர் முதல் செயல்படும்.
எஸ்.கே.கக்ரன்,
மருத்துவக் கண்காணிப்பாளர்,
சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை