21 நாட்கள் பரோல் கேட்டு குர்மீத் ராம் மீண்டும் மனு மீண்டும் மீண்டுமா? --------------
21 நாட்கள் பரோல் கேட்டு குர்மீத் ராம் மீண்டும் மனு மீண்டும் மீண்டுமா? --------------
21 நாட்கள் பரோல் கேட்டு குர்மீத் ராம் மீண்டும் மனு மீண்டும் மீண்டுமா? --------------
ADDED : ஜூன் 15, 2024 01:09 AM

புதுடில்லி, கடந்த 10 மாதங்களில், 'தேரா சச்சா சவுதா' தலைவரும், பாலியல் பலாத்கார குற்றவாளியுமான குர்மீத் ராம் ரஹிமுக்கு ஏழு முறை பரோல் வழங்கப்பட்ட நிலையில், அவர் பரோல் கேட்டு மீண்டும் விண்ணப்பித்து உள்ளார்.
ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தை தலைமையிடமாக வைத்து, தேரா சச்சா சவுதா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஏழு முறை
இதன் தலைவரான குர்மீத் ராம் ரஹிம், 56, பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 மாதங்களில் மட்டும், இவருக்கு ஏழு முறை ஹரியானாவில் ஆளும் பா.ஜ., அரசு பரோல் வழங்கி உள்ளது. கடைசியாக, கடந்த ஜனவரியில் குர்மீத் ராம் ரஹிமுக்கு, 50 நாட்கள் பரோல் வழங்கி ஹரியானா அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஜனவரி இறுதியில், பலாத்கார குற்றவாளி குர்மீத் ராம் ரஹிமுக்கு அடிக்கடி பரோல் வழங்கப்பட்டதற்கு கேள்வி எழுப்பிய பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், இனி அவர் பரோல் கேட்டு விண்ணப்பித்தால், நீதிமன்றத்திடம் ஹரியானா அரசு அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு மீண்டும் 21 நாட்கள் பரோல் வழங்கும்படி, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் குர்மீத் ராம் ரஹிம் மனு தாக்கல் செய்துள்ளார். தேரா சச்சா சவுதா நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு பரோல் தேவை என, அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், ஜூலை 2ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, ஹரியானா அரசு மற்றும் சீக்கிய குருத்வாரா பிரபந்த கமிட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
செல்வாக்கு
பஞ்சாபின் மால்வா பிராந்தியத்தில், செல்வாக்குமிக்க நபராக, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் உள்ளார். இவரது ஆதரவாளர்கள், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.
இதைக் கருதியே, உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் சமயங்களில், குர்மீத் ராம் ரஹிமுக்கு அடிக்கடி பரோல் வழங்கப்படுவதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.