சென்னபட்டணா மீது திடீர் பாசம் ஏன்? சிவகுமாருக்கு குமாரசாமி கேள்வி!
சென்னபட்டணா மீது திடீர் பாசம் ஏன்? சிவகுமாருக்கு குமாரசாமி கேள்வி!
சென்னபட்டணா மீது திடீர் பாசம் ஏன்? சிவகுமாருக்கு குமாரசாமி கேள்வி!
ADDED : ஜூன் 22, 2024 04:39 AM

''துணை முதல்வர் சிவகுமார் ஒன்றரை ஆண்டாக, சென்னபட்டணா தொகுதிக்கு செல்லவில்லை. இப்போது தொகுதி மீது, திடீரென ஏன் பாசம் வந்துள்ளது,'' என மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
ஜனநாயக முறை
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, டில்லியில் நேற்று யோகா நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்ற பின், மத்திய அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:
இத்தனை நாட்களாக, சென்னபட்டணாவை மேம்படுத்த வேண்டாம் என, துணை முதல்வர் சிவகுமாரை யார் தடுத்தது.
எம்.பி.,யாக இருந்த போது, இவரது சகோதரர் சுரேஷ், தொகுதிக்கு அளித்த பங்களிப்பு என்ன. ஒன்றரை ஆண்டாக, சென்னபட்டணாவுக்கு சிவகுமார் செல்லவில்லை.
இப்போது தொகுதி மீது, திடீர் பாசம் வந்துள்ளது. தொகுதியின் இடைத்தேர்தலில், யார் வேண்டுமானாலும் வேட்பாளராகலாம்.
ஜனநாயக நடைமுறையில், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். எங்கள் வேட்பாளர் யார் என்பதை, காலம் தீர்மானிக்கும். லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் காங்கிரசுக்கு குறைந்த சீட்கள் கிடைக்க, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் காரணம் என, அக்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அப்படி என்றால், 2023 சட்டசபை தேர்தலில், 135 தொகுதிகளில் காங்., வெற்றி பெற்றது எப்படி. அப்போதும் குளறுபடி இருந்ததா.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், மைசூரில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னபட்டணா தொகுதியில் துணை முதல்வர் சிவகுமார், போட்டியிட மாட்டார். என் அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன்.
அவர் பேச்சில், அரசியல் நோக்கம் தெரிகிறது. தன் தம்பி சுரேஷுக்கு கனகபுராவில் வாய்ப்பளித்து, சென்னபட்டணாவில் சிவகுமார் போட்டியிட்டால், ஓட்டு போட முடியுமா என, தொகுதி மக்கள் கேட்கின்றனர்.
தலைவர்கள் முடிவு
சென்னபட்டணா தொகுதியில் களமிறங்குவதாக, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் எப்போதும் கூறவில்லை. அதே போன்று யோகேஸ்வர், மக்களின் கருத்து தனக்கு சாதகமாக உள்ளது என, கூறியுள்ளார்.
யார் போட்டியிட வேண்டும் என, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்வர். கமிட்டி தலைவர் என்பதால், வேட்பாளர் விஷயத்தில் என் தனிப்பட்ட கருத்தை கூற முடியாது. அனைத்து இடைத்தேர்தல் முடிவுகளும், அரசுக்கு சாதகமாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.