Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ அனைத்து கட்சி கூட்டத்துக்கு நான் ஏன் செல்லணும்? காங்கிரஸ் அரசை வெளுத்து வாங்கிய குமாரசாமி

அனைத்து கட்சி கூட்டத்துக்கு நான் ஏன் செல்லணும்? காங்கிரஸ் அரசை வெளுத்து வாங்கிய குமாரசாமி

அனைத்து கட்சி கூட்டத்துக்கு நான் ஏன் செல்லணும்? காங்கிரஸ் அரசை வெளுத்து வாங்கிய குமாரசாமி

அனைத்து கட்சி கூட்டத்துக்கு நான் ஏன் செல்லணும்? காங்கிரஸ் அரசை வெளுத்து வாங்கிய குமாரசாமி

ADDED : ஜூலை 15, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
மாண்டியா : ''மக்கள் குறை தீர் முகாமின் போது, மாநில அரசு அதிகாரிகளை அனுப்பவில்லை. அப்படி இருக்கும் போது, இவர்கள் அழைத்தால், காவிரியின் அனைத்து கட்சி கூட்டத்துக்கு செல்ல வேண்டுமா. மாநில அதிகாரிகளை எனது கூட்டத்துக்கு அனுப்பவில்லை என்றால், மாநில வளர்ச்சிக்கு நான் என்ன செய்ய முடியும்,'' என மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

மாண்டியாவில் வெற்றி பெற்ற குமாரசாமி, தற்போது, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

மாண்டியாவின் பாண்டவபுராவில் நேற்று ம.ஜ.த., தொண்டர்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்தினர். விழாவுக்கு வந்த அவருக்கு, பாரம்பரிய நாட்டுப்புற கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

விழாவில் குமாரசாமி பேசியதாவது:

என்னை எம்.பி.,யாக்கி, மத்திய அமைச்சராக்கி ஆசிர்வாதம் செய்த கட்சி தொண்டர்களுக்கும், பிரமுகர்களுக்கும் நன்றி. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே, என்னிடம் வந்து கஷ்டம் என்று சொன்னவர்களுக்கு உதவி உள்ளேன்.

சமீபத்தில் நான் மாண்டியாவில் நடத்திய மக்கள் குறைதீர் முகாமிலும், பலரும் நிதியுதவி கேட்டு மனு கொடுததுள்ளனர். கவலைப்பட வேண்டாம்; கண்டிப்பாக உதவி கிடைக்கும். மூன்று முறை இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டும், நான் உயிருடன் இருக்கிறேன் என்றால், அது விவசாயிகள், ஏழைகளுக்கு உதவுவதற்கு தான்.

காவிரி நீர் விஷயத்தில் அதிகமான போராட்டம் நடத்தியதில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பங்கு அதிகம். அரசியல் ரீதியாகவும் சரி, நீதிமன்றத்திலும் சரி, விவசாயிகளுக்காக போரட்டம் நடத்தியதில் முன்னிலை வகிப்பவர் தேவகவுடா.

120 ஆண்டு பிரச்னை


நான் மத்திய அமைச்சர் ஆகி ஒரு மாதம் மட்டுமே ஆகிறது. ஆனால், 120 ஆண்டு காவிரி பிரச்னையை உடனே தீர்க்கும்படி, கர்நாடக அமைச்சர்கள் சிலர் கூறுகின்றனர். நீங்கள் தானே ஆட்சி நடத்துகிறீர்கள். நீங்கள் தீர்க்க வேண்டியது தானே. அனைத்திலும் முறைகேடு நடத்தி, கொள்ளை அடித்து விட்டு, ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்கின்றனர்.

நடவடிக்கை


கொஞ்சம் நேரம் கொடுங்கள். காவிரி பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் குறை தீர் முகாமின் போது, மாநில அரசு அதிகாரிகளை அனுப்பவில்லை.

அப்படி இருக்கும் போது, இவர்கள் அழைத்தால், காவிரி அனைத்து கட்சி கூட்டத்துக்கு செல்ல வேண்டுமா. மாநில அதிகாரிகளை எனது கூட்டத்துக்கு அனுப்பவில்லை என்றால், மாநில வளர்ச்சிக்கு நான் என்ன செய்ய முடியும்.

ஆனால், அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு சமீபத்தில் சென்ற போது, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அடிக்கடி வந்து எங்களுக்கு உதவும்படி போன் செய்து கேட்டு கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மரியாதை வழங்கி, மத்திய அமைச்சரவையில், 9வது இடத்தை தந்துள்ளார். இது மாநில மக்களுக்கு கிடைத்த கவுரவம்.

இவ்வாறு அவர் பேசினார்.

500 கிலோ மட்டன்

இந்த பாராட்டு விழாவுக்கு, ஏராளமான ம.ஜ.த., தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு, அசைவ விருந்து வழங்கப்பட்டது. கேழ்வரகு களி, மட்டன் குழம்பு, சிக்கன் ப்ரை, சிக்கன் பிரியாணி, ஆட்டு குடல் கறி, முட்டை, வெள்ளை சாதம், வாழைப்பழம், பாயசம் வழங்கப்பட்டன. இதற்காக, 500 கிலோ மட்டன், 250 கிலோ சிக்கன், ஒரு லட்சம் முட்டைகள் வாங்கப்பட்டிருந்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us