Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'ஜம்மு பயங்கரவாத தாக்குதல்களை பிரதமர் மோடி கண்டிக்காதது ஏன்?'

'ஜம்மு பயங்கரவாத தாக்குதல்களை பிரதமர் மோடி கண்டிக்காதது ஏன்?'

'ஜம்மு பயங்கரவாத தாக்குதல்களை பிரதமர் மோடி கண்டிக்காதது ஏன்?'

'ஜம்மு பயங்கரவாத தாக்குதல்களை பிரதமர் மோடி கண்டிக்காதது ஏன்?'

ADDED : ஜூன் 12, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி, 'ஜம்மு - காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களில், பயங்கரவாதிகள் மூன்று முறை தாக்குதல் நடத்திய நிலையில், அது குறித்து பிரதமர் மோடி கண்டிக்காமல் மவுனம் காப்பது ஏன்?' என, காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் எம்.பி., ராகுல் தன் சமூக வலைதள பக்கத்தில், 'பா.ஜ., ஆட்சியில் நாட்டிற்கு எதிராக சதித் திட்டம் தீட்டுபவர்கள் ஏன் பிடிபடவில்லை என்பதற்கு நாடு பதில் சொல்ல வேண்டும்.

'வாழ்த்து செய்திகளுக்கு பதிலளிப்பதில் மும்முரமாக உள்ள பிரதமரால், ஜம்மு - காஷ்மீரில் கொடூரமாகக் கொல்லப்பட்ட பக்தர்களின் குடும்பத்தாரின் அழுகையைக் கூட கேட்க முடியாது.

'ரியாசி, கதுவா, தோடா ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களில், மூன்று வெவ்வேறு பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், பிரதமர் இன்னும் கொண்டாடுவதில் மும்முரமாக உள்ளார்' என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஊடக பொறுப்பாளருமான பவன் கேரா கூறியதாவது:

காஷ்மீர் விஷயத்தில் பா.ஜ., அரசு மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், மோடி அரசு தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்களின் விளைவுகளை அப்பாவிகள் அனுபவிக்கின்றனர். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாத அக்கட்சியின் அரசியல் வணிகம் தொடர்கிறது.

பாகிஸ்தான் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பதிலளிக்கும் பணியில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார். கொடூரமான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து அவர் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை? ஏன் மவுனம் காக்கிறார்.

பா.ஜ., ஆட்சிக்காலத்தில் ஜம்மு - காஷ்மீரில் 2,262 பயங்கரவாத தாக்குதல்களில் 363 பொதுமக்கள் இறந்ததுடன், 596 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். எனினும் மோடி அரசு, தேச பாதுகாப்பிற்கான ஆபத்தை பொருட்படுத்துவதாக தெரியவில்லை.

ஜம்மு - காஷ்மீரில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்பும் என்ற பா.ஜ.,வின் வெற்று வாதங்கள், கடந்த சில தினங்களாக அப்பகுதியில் நடந்துவரும் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களால் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us