துணை முதல்வர் பதவி யாருக்கு? அமைச்சர்கள் ஏட்டிக்கு போட்டி!
துணை முதல்வர் பதவி யாருக்கு? அமைச்சர்கள் ஏட்டிக்கு போட்டி!
துணை முதல்வர் பதவி யாருக்கு? அமைச்சர்கள் ஏட்டிக்கு போட்டி!
ADDED : ஜூன் 16, 2024 10:59 PM

பெலகாவி: ''நான் துணை முதல்வர் பதவி தருமாறு கேட்கவில்லை,'' என பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறிய நிலையில், ''யாரிடம் பேசினால் கிடைக்குமோ அவர்களிடம் பேசுவேன்,'' என வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது என்று முதல்வர் சித்தராமையா ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார். வாக்குறுதிகளை செயல்படுத்த நிதி பற்றாக்குற ஏற்படவில்லை. ஏற்கனவே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
28 தொகுதிகள்
லோக்சபா தேர்தலில் பெலகாவியில் தோல்வி; சிக்கோடியில் வெற்றி குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேட்டுள்ளார். லோக்சபாவின் 28 தொகுதிகளின் தலைவர்கள் அறிக்கை தயாரித்து, மேலிட பார்வையாளர்களிடம் சமர்பிப்பர்.
எனக்கும், லட்சுமண் சவதிக்கும் இடையே குளிர் தான் உள்ளது; போர் இல்லை. பெலகாவியில் காங்கிரஸ் தோற்றதில் உள்குத்து எதுவும் இல்லை. கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு தான் வாக்களித்து உள்ளனர். ஆனால் மக்கள் வேறு முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் மூன்று துணை முதல்வர்களை உருவாக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு துணை முதல்வர் பதவி தருமாறு கேட்கவில்லை.
இவ்வாறு அவர் அவர் கூறினார்.
மேலிடம் முடிவு
இதே வேளையில், பெலகாவி விமான நிலையத்தில் நேற்று அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா அளித்த பேட்டி:
கர்நாடகாவில் துணை முதல்வர்கள் பதவியை உருவாக்குவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். மூன்று வேண்டுமா, நான்கு வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்வர்.
இது பொது மக்களின் முக்கியமான பிரச்னை இல்லை. நான் துணை முதல்வராக வேண்டும் என்றால், யாரிடம் பேச வேண்டுமோ, அவர்களிடம் பேசுவேன். உங்களிடம் பேசி என்ன பயன்.
நம் தகுதிக்கு மேல் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பணியை செய்தால், பலருக்கு உதவலாம். இருப்பதில் திருப்தி அடைவோம். நான்கு பேருக்கு நல்லது நடக்கும் வகையில் பணியாற்றி, அதில் மன நிறைவை காண்போம். நமக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது தேடி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.