மாற்று மனை பெற்றவர்கள் யார் யார்? பகிரங்கப்படுத்த மஹாதேவப்பா தயார்!
மாற்று மனை பெற்றவர்கள் யார் யார்? பகிரங்கப்படுத்த மஹாதேவப்பா தயார்!
மாற்று மனை பெற்றவர்கள் யார் யார்? பகிரங்கப்படுத்த மஹாதேவப்பா தயார்!
ADDED : ஜூலை 08, 2024 06:33 AM

மைசூரு: ''மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்துக்கு, நிலத்தை விட்டுக்கொடுத்து, மாற்று வீட்டுமனை பெற்றவர்களின் பட்டியல், விளம்பரம் மூலமாக பகிரங்கப்படுத்தப்படும்,'' என சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, சட்டப்படியே வீட்டுமனை வழங்கப்பட்டது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இந்த நிலம் தலித்துகளுக்கு சொந்தமானது என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்ட எல்லை
கடந்த 1985ல், இந்த நிலத்தை மாவட்ட கலெக்டர் ஏலம் விட்டார். நிங்கா என்பவர், இதை வாங்கினார். ஏலத்தில் நிலம் வாங்கியதால், பி.டி.சி.எல்., சட்ட எல்லைக்கு நிலம் உட்படாது. தலித்துகளுக்கு சொந்தமான நிலம் மட்டுமே, இந்த சட்ட எல்லையில் வரும்.
கடந்த 2004ல், மல்லிகார்ஜுன சாமி நிலத்தை வாங்கி, தன் தங்கை பார்வதிக்கு சீதனமாக கொடுத்தார். 2005ல் மூடா எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையம், நிலத்தை கையகப்படுத்தி வீட்டுமனைகளாக உருவாக்கி, விற்பனை செய்தது. இந்த நிலத்துக்கு நிவாரணம் வழங்கும்படி, 2014ல், 'மூடா'விடம் பார்வதி வேண்டுகோள் விடுத்தார்.
இவருக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை, மூடா கையகப்படுத்தி வீட்டுமனைகளாக்கியது. தான் செய்த தவறைஒப்புக்கொண்டது. மொத்த இடத்தின் பரப்பளவு 1.50 லட்சம் சதுர அடியாகும்.
இதற்கு மாற்றாக 38,000 சதுர அடி பரப்பளவு வீட்டுமனை வழங்க, மூடா ஒப்புக்கொண்டது. சட்டத்துக்கு உட்பட்டு வீட்டுமனை வழங்கியது. மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்துக்கு, நிலத்தை விட்டுக்கொடுத்து, மாற்று வீட்டுமனை பெற்றவர்களின் பட்டியல், விளம்பரம் மூலமாக பகிரங்கப்படுத்தப்படும்.
'மூடா' வீட்டுமனைகள் வழங்கியதில், முறைகேடு நடந்திருந்தால் விசாரணை நடத்த, அரசு தயாராக உள்ளது.
இது குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அறிக்கை வந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் நோக்கம்
மாநில மக்கள் தேவையின்றி சந்தேகப்பட வேண்டாம். முதல்வர் சித்தராமையாவோ அல்லது நானோ மைசூரில் அரசு நிலத்தை தவறாக பயன்படுத்த அனுமதி அளிக்க மாட்டோம். சிலர் அரசியல் நோக்கில், தேவையின்றி குற்றம்சாட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
'எலி செத்தாலும்
சி.பி.ஐ., விசாரணை'
அமைச்சர் மஹாதேவப்பா கூறுகையில், ''மூடாவில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என, பா.ஜ.,வினர் வலியுறுத்துகின்றனர். இவர்கள் எலி செத்தாலும், குரங்கு செத்தாலும் சி.பி.ஐ., விசாரணை கேட்டால் எப்படி. நமது அதிகாரிகளுக்கு விசாரணை நடத்தும் திறன் உள்ளது. பா.ஜ., அரசில் எத்தனை வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு ஒப்படைத்தனர்,'' என்றார்.