கர்நாடக காங்கிரசில் என்ன தான் நடக்கிறது?
கர்நாடக காங்கிரசில் என்ன தான் நடக்கிறது?
கர்நாடக காங்கிரசில் என்ன தான் நடக்கிறது?
ADDED : ஜூன் 26, 2024 08:50 AM
கர்நாடகாவில், 2023 மே 20ம் தேதி காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் பதவியேற்றனர். ஆட்சி அமைந்து, 13 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.
ஆட்சி அமைவதற்கு முன்னரே, முதல்வர் பதவிக்கு சிவகுமார் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் சித்தராமையாவுக்கு அதிக ஆதரவு இருந்ததால், அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது, இரண்டரை ஆண்டுகளுக்கு பின், சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என்றும், அமைச்சர்களையும் மாற்றி, மற்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று வாய்மொழி ஒப்பந்தத்தை, காங்., மேலிடம் போட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த வகையில், இன்னும் ஒன்றரை ஆண்டு காலம், முதல்வர் பதவியில் சித்தராமையா இருப்பார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், இவரே தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் திரைமறைவில் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக, சிவகுமாருக்கு 'செக்' வைக்கும் வகையில், மூத்த அமைச்சர்கள் சிலர் களத்தில் குதித்துள்ளனர். 'முதல்வர், துணை முதல்வர், மாநில தலைவர் போன்ற முக்கிய பதவிகள், பழைய மைசூரு மண்டலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் துணை முதல்வர் பதவி தர வேண்டும்' என்று போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
இந்த விஷயம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சித்தராமையாவின் எதிர் கோஷ்டி, முதல்வர் மாற்றம் குறித்து பேச துவங்கி உள்ளனர். இன்னும் சிலர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதை கூர்ந்து கண்காணித்து வரும் கட்சி மேலிடம், கர்நாடக காங்கிரசில் என்ன தான் நடக்கிறது என்று புலம்ப துவங்கி உள்ளது.
ஒரு பக்கம் வாக்குறுதி திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மறு பக்கம் ஆட்சி அமைந்து ஓராண்டு முடிந்தும், வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையில், உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது.
கட்சியில் நடந்து வரும் இத்தகைய செயல்பாடுகளால், உள்ளாட்சி தேர்தல் மீது ஆசை வைத்துள்ள பிரமுகர்கள், தங்கள் வெற்றிக்கு தடங்கல் ஏற்படுமோ என்று கவலையில் உள்ளனர்.
இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிந்ததும், டில்லி தலைவர்கள் கர்நாடகாவுக்கு வந்து, உட்கட்சி பூசலை சரிக்கட்ட திட்டமிட்டுள்ளனர்.
- நமது நிருபர் -