மீன்கள் இறப்புக்கு என்ன காரணம்? கேரள முதல்வர் பினராயி விளக்கம்
மீன்கள் இறப்புக்கு என்ன காரணம்? கேரள முதல்வர் பினராயி விளக்கம்
மீன்கள் இறப்புக்கு என்ன காரணம்? கேரள முதல்வர் பினராயி விளக்கம்
ADDED : ஜூன் 12, 2024 01:07 AM

திருவனந்தபுரம், “பெரியாறு ஆற்றில் மீன்கள் அதிகளவில் இறந்ததற்கு, தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததே காரணம். தொழிற்சாலைகளில் இருந்து ஆற்றில் ரசாயனக் கழிவுகள் வெளியேற்றப்படவில்லை,” என, கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் தெரிவித்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரியாறு ஆற்றில், கடந்த மே 21ல், அதிகளவில் மீன்கள் இறந்து கிடந்தன.
இதே போல், அந்த ஆற்றை ஒட்டியுள்ள வரப்புழா, கடமக்குடி, சேரநல்லுார் போன்ற ஊராட்சிகளில் உள்ள மீன் பண்ணைகளிலும் மீன்கள் இறந்தன.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் ஆற்றில் விடப்பட்டதே இதற்கு காரணம் என, தகவல் பரவியது.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரிக்க, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கேரள அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கேரள சட்டசபையில், இந்த விவகாரம் குறித்து, ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ., டி.ஜே.வினோத் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
பெரியாறு ஆற்றில் மீன்கள் இறந்த விவகாரம் குறித்து, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், மீன்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவை விட, ஆக்சிஜன் குறைந்த அளவு இருந்ததே மீன்கள் இறப்புக்கு காரணம் என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பலத்த மழை பெய்ததை தொடர்ந்து, பத்தாலத்தில் உள்ள ஷட்டர் திறக்கப்பட்டது.
அப்போது, ஷட்டரின் மேல்புறத்திலிருந்து ஆக்சிஜன் குறைவான தண்ணீர் ஆற்றில் பாய்ந்ததால், இந்த மீன்கள் இறந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பெரியாறு ஆற்றின் கரையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலையின் அறிக்கையைப் பெற்ற பின்னரே, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்.
இந்த நிகழ்வால், விவசாயிகளுக்கு, 13.56 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.