Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'யு - வின்' தளத்தில் தடுப்பூசி விபரம்: ஆகஸ்ட் இறுதியில் அமலாகிறது

'யு - வின்' தளத்தில் தடுப்பூசி விபரம்: ஆகஸ்ட் இறுதியில் அமலாகிறது

'யு - வின்' தளத்தில் தடுப்பூசி விபரம்: ஆகஸ்ட் இறுதியில் அமலாகிறது

'யு - வின்' தளத்தில் தடுப்பூசி விபரம்: ஆகஸ்ட் இறுதியில் அமலாகிறது

ADDED : ஜூலை 15, 2024 12:35 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நாடு முழுதும், வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்த விபரங்களை, டிஜிட்டல் முறையில் பராமரிக்கும் வகையில், ஆகஸ்ட் இறுதியில், 'யு - வின்' இணையதளம் நடைமுறைக்கு வரும் என, தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு முடிவு


கொரோனா தடுப்பூசி விபரங்களை பதிவு செய்ய, மத்திய அரசின் சார்பில், கோ - வின் என்ற இணையதளம் துவங்கப்பட்டது. இதையடுத்து, வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்த விபரங்களை பதிவு செய்ய புதிய இணைய தளத்தை துவக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, மேற்கு வங்கத்தை தவிர, நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தடுப்பூசிகள் செலுத்தப்படும் விபரங்களை பதிவு செய்ய, யு - வின் என்ற இணையதளம், சோதனை அடிப்படையில், கடந்த ஜனவரியில் துவங்கப்பட்டது.

கடந்த 9ம் தேதி நிலவரப்படி, யு - வின் இணையதளத்தில், 5.33 கோடி பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். மேலும், 83.55 லட்சம் தடுப்பூசி முகாம்கள் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட்டு, 18.15 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த நடைமுறையை, அடுத்த மாத இறுதியில், நாடு முழுதும் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில், தடுப்பூசி செலுத்தப்படும் பதிவுகள் கையேடுகளில் பராமரிக்கப்படுகின்றன. இவற்றை பராமரிப்பது கடினமாக உள்ளது.

எதிர்பார்ப்பு


மேலும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படும் விபரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இந்த பிரச்னைகளை, யு- - வின் இணையதளம் போக்கும்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் போலவே, கியூ.ஆர்., குறியீடு அடிப்படையில், டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய -தடுப்பூசி சான்றிதழை, இந்த இணையதளம் வழங்கும். இதை குடிமக்கள் எந்த நேரத்திலும் அணுகலாம்.

நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி நிகழ்வை, யு - வின் இணையதளம் பதிவு செய்கிறது.

ஒவ்வொரு கர்ப்பிணியின் விபரத்தையும் பதிவு செய்து தடுப்பூசி செலுத்துதல், பிரசவம் மற்றும் புதிதாக பிறந்த குழந்தை குறித்த விபரங்களை பதிவு செய்தல், குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றுக்கு, இந்த இணையதளம் பயன்படுத்தப்படும்.

தடுப்பூசி செலுத்துவதற்கான நினைவூட்டலும் கர்ப்பிணியருக்கு வழங்கப்படும்.

இந்த நடைமுறை, அடுத்த மாத இறுதியில் நாடு முழுதும் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us