அமெரிக்காவின் வரி விதிப்பு இன்னும் முடிவாகவில்லை; தொடர்ந்து பேச்சு நடத்துவதாக அரசு விளக்கம்
அமெரிக்காவின் வரி விதிப்பு இன்னும் முடிவாகவில்லை; தொடர்ந்து பேச்சு நடத்துவதாக அரசு விளக்கம்
அமெரிக்காவின் வரி விதிப்பு இன்னும் முடிவாகவில்லை; தொடர்ந்து பேச்சு நடத்துவதாக அரசு விளக்கம்
UPDATED : மார் 12, 2025 05:47 AM
ADDED : மார் 12, 2025 01:30 AM
புதுடில்லி : அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிக வரியை விதிப்பதாக, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, அந்த நாடுகள் எந்த அளவுக்கு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என அவர் கூறினார். மேலும், இந்தியா, சீனா மீதான பரஸ்பர வரி விதிப்பு, ஏப்., 2 முதல் அமலுக்கு வருவதாகவும் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தவும், சுலபமாக்கவும் தொடர்ந்து பேசி வருகிறோம். பரஸ்பரம் பலனளிக்கும் வகையிலும், நேர்மையான முறையில் இருக்கவும் தொடர்ந்து பேசி வருகிறோம்.
இது ஒரு தொடர் நடவடிக்கை. பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களின் அடிப்படையில் சந்தை அணுகல் மற்றும் வர்த்தகத்துக்கு உள்ள தடைகளை குறைப்பது தொடர்பாக, அமெரிக்காவுடன் பரஸ்பரம் பேசி வருகிறோம். இதில், வரி விதிப்பும் அடங்கும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போதுள்ள புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள, இருதரப்பு ஒப்பந்தங்கள், தாராள வர்த்தக ஒப்பந்தங்கள் என, சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அனைத்திலும், உள்நாட்டின் நலனை பாதுகாப்பது அடித்தளமாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.