Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ யு.பி.எஸ்.சி., தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா

யு.பி.எஸ்.சி., தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா

யு.பி.எஸ்.சி., தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா

யு.பி.எஸ்.சி., தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா

ADDED : ஜூலை 21, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி : பதவிக்காலம் முடிவடைய மேலும் ஐந்து ஆண்டுகள் உள்ள நிலையில், யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணைய தலைவர் மனோஜ் சோனி, நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட மத்திய அரசின் பல பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம்.

இதன் உறுப்பினராக, பிரபல கல்வியாளர் மனோஜ் சோனி, 59, கடந்த 2017ல் பதவியேற்றார். கடந்தாண்டு மே மாதம் அவர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் 2029 மே மாதம் வரை உள்ளது.

இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக தன் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் நேற்று அறிவித்தார். ஐ.ஏ.எஸ்., பயிற்சி அதிகாரி பூஜா கேத்கர், போலி ஆவணங்கள் அளித்து தேர்ச்சி பெற்றார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், அவர் மீது பல புகார்கள் உள்ளன. இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

ஆனால், அந்த விவகாரத்துக்கும், மனோஜ் சோனியின் ராஜினாமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என யு.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் சொந்த சமூக, ஆன்மிக காரணங்களுக்காகவே மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அக்கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பானரான, பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:

கடந்த 2014ல் மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததில் இருந்து, அரசியலமைப்பு சட்ட அமைப்புகள் சிதைக்கப்பட்டன. தற்போது கல்வி அமைப்புகளும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.

என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நாட்டின் நிர்வாகத்தை கவனிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேர்விலும் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் ராஜினாமா செய்ததற்கு எந்தக் காரணத்தை கூறினாலும், யு.பி.எஸ்.சி., தொடர்பான தற்போதைய சர்ச்சை விவகாரங்களே முக்கிய காரணமாக இருக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமரின் நம்பிக்கைக்கு உரியவர் சோனி. யு.பி.எஸ்.சி., வரலாற்றில் அதன் தலைவர் ராஜினாமா செய்திருப்பது இதுவே முதல்முறை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us