காங்., அரசுக்கு எதிராக மக்கள் திரள மத்திய அமைச்சர் குமாரசாமி அழைப்பு
காங்., அரசுக்கு எதிராக மக்கள் திரள மத்திய அமைச்சர் குமாரசாமி அழைப்பு
காங்., அரசுக்கு எதிராக மக்கள் திரள மத்திய அமைச்சர் குமாரசாமி அழைப்பு
ADDED : ஜூன் 17, 2024 04:22 AM
மாண்டியா : ''பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பா.ஜ., - ம.ஜ.த.,வினர் போராட்டம் நடத்துவதற்கு பதில், மாநில அரசின் தவறான நிர்வாகத்துக்கு எதிராக, மக்கள் ஒன்று திரள வேண்டும்,'' என மத்திய அமைச்சர் குமராசாமி தெரிவித்துள்ளார்.
வருவாய் குறைவு
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், விஜயபுராவில் நேற்று அளித்த பேட்டி:
தமிழகம் உட்பட, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. மற்ற மாநிலங்களில், ஐந்து முதல் 10 ரூபாய் வரை அதிகம் உள்ளது. யார் மீதும் தேவையின்றி சுமையை ஏற்படுத்தவில்லை.
அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது. வளர்ச்சி பணிகளுக்கும், வாக்குறுதி திட்டங்களுக்கும் நிதி தேவை. எனவே கட்டாயத்தின் பேரில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பதவிக்கு வந்த பின், காஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதை ஏன் ஊடகத்தினர் கேள்வி எழுப்பவில்லை.
நாங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும், அது மக்களுக்காக தான். வாக்குறுதி திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தினோம். திட்டங்களுக்கு நாங்கள் நிதி திரட்ட வேண்டாமா.
எரிபொருள் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. காங்கிரஸ் அரசு இருந்த போது, காஸ் சிலிண்டர் விலை 440 ரூபாயாகவும், பெட்ரோல் விலை 64 ரூபாயாகவும் இருந்தது. பா.ஜ., அரசில் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை, 110 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
குமாரசாமி பதிலடி
இதற்கு பதிலளிக்கும் வகையில், மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு சென்ற மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற பின் அளித்த பேட்டி:
ஐந்து வாக்குறுதி திட்டங்களை தொடரவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்ப்டடு உள்ளது என்று காங்கிரஸ் அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார். மக்களிடம் பணம் வசூலித்து, அவர்களுக்கே திருப்பி கொடுக்கின்றனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அரசை எச்சரிக்க வேண்டும்.
இடைத்தேர்தல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக, பா.ஜ., - ம.ஜ.த., வினர் போராட்டம் நடத்துவதற்கு பதில், மாநில அரசின் தவறான நிர்வாகத்துக்கு எதிராக, மக்கள் ஒன்று திரள வேண்டும்.
சென்னப்பட்டணா தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவர் என்று முடிவு செய்ய, இன்னும் கால அவகாசம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.