அதிகாரிகள் சொத்து குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை துாத்துக்குடி துப்பாக்கி சூடு
அதிகாரிகள் சொத்து குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை துாத்துக்குடி துப்பாக்கி சூடு
அதிகாரிகள் சொத்து குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை துாத்துக்குடி துப்பாக்கி சூடு
ADDED : ஆக 03, 2024 02:13 AM
புதுடில்லி, துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரிக்கும்படி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தின் துாத்துக்குடியில் செயல்பட்டு வந்த, 'ஸ்டெர்லைட்' ஆலையை மூடக்கோரி, அப்பகுதி மக்கள் 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்ததை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர்; 33 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன், துப்பாக்கிச் சூடுக்கு காரணமான சில போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை குற்றவாளிகளாக சேர்த்தது. அவர்கள் மீது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
விசாரணையின் இறுதியில், போலீசார் மீது தவறில்லை என வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து, தன்னார்வலர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதி பதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்துகள் குறித்து விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் 99 நாட்கள் நடந்தது. 100வது நாள் போராட்டத்தின் போது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தபோது தான் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், போலீஸ் மீது தவறில்லை என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது,'' என்றார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், அடுத்த விசாரணை வரை, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.