'சத்திய சோதனை கமிட்ட ி ' வருகையால் கர்நாடக அமைச்சர்களுக்கு உதறல்
'சத்திய சோதனை கமிட்ட ி ' வருகையால் கர்நாடக அமைச்சர்களுக்கு உதறல்
'சத்திய சோதனை கமிட்ட ி ' வருகையால் கர்நாடக அமைச்சர்களுக்கு உதறல்
ADDED : ஜூலை 12, 2024 06:52 AM
பெங்களூரு: 'சத்திய சோதனை' கமிட்டி வருகையால், லோக்சபா தேர்தலில் காங்கிரசின் பின்னடைவுக்கு காரணமான முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருப்பதால், இம்முறை லோக்சபா தேர்தலில், குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, மேலிடம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு ஒப்புக்கொண்டு, அமைச்சர்கள் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து, தங்கள் குடும்பத்தினருக்கு 'சீட்' பெற்றனர்.
மேலிடம் எச்சரிக்கை
'இவர்களை வெற்றி பெற வைக்கா விட்டால், பதவியை இழக்க நேரிடும்' என, மேலிடம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால் வெறும் ஒன்பது தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் கட்சியினரின், 'உள்குத்து' வேலையே, தோல்விக்கு காரணமாக அமைந்தது. 17 அமைச்சர்களின் சொந்த தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு, என்ன காரணம் என்பதை கண்டறிய, காங்கிரஸ் மேலிடம், 'சத்திய சோதனை கமிட்டி' அமைத்துள்ளது. இக்கமிட்டி நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியின் தோல்விக்கான காரணங்களை கண்டுபிடிக்கிறது,
இந்த வகையில், காங்கிரஸ் தேசிய முதன்மை செயலர் மதுசூதன் மிஸ்த்ரி தலைமையில், கவுரவ் கோகோய், ஹிபி ஹிடன் அடங்கிய கமிட்டி, பெங்களூரு வந்துள்ளது.
இந்த கமிட்டியினர் நேற்று காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை மூத்த தலைவர்களுடனும்; மதியம் 1:00 முதல் 2:30 மணி வரை அமைச்சர்களுடனும்; மதியம் 3:00 முதல் 3:30 வரை எம்.எல்.ஏ.,க்களுடனும்; 3:30 முதல் மாலை 5:50 மணி வரை எம்.எல்.சி.,க்களுடனும்; மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினர்,
இன்றும் ஆலோசனை
இன்று காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை காங்கிரஸ் நிர்வாகிகளுடனும்; மதியம் 12:30 முதல் 1:30 மணி வரை, தோற்ற வேட்பாளர்களுடனும்; மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, சட்டசபை தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுடனும் ஆலோசனை நடத்துகின்றனர்.
மாலை 4:00 முதல், 5:00 மணி வரையிலும் கார்ப்பரேஷன், வாரிய தலைவர்களுடனும்; மாலை 5:00 முதல் 6:30 மணி வரை மாநில காங்., செயல் தலைவர்களுடன் ஆலோசிக்கின்றனர்.
சத்திய சோதனை கமிட்டியின் வருகை, அமைச்சர்கள், தலைவர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, முரண்டு பிடித்து அமைச்சர் பதவியில் அமர்ந்தவர்கள், தொகுதியில் கட்சியை பலப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.
பூசல் வெடிப்பு
தங்களின் தொகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் அமைச்சர்கள், கட்சி எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளை அலட்சியப்படுத்தினர். இது வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமானது.
சில தொகுதிகளில் பரஸ்பரம் வெறுப்பு, பொறாமை, அதிருப்தியால் உள்குத்து வேலை செய்து, வேட்பாளர்களை தோற்கடித்தனர்.
தோல்விக்கு காரணமான அமைச்சர்களை நீக்க வேண்டும் என, கட்சிக்குள் பூசல் வெடித்து உள்ளது.
கமிட்டி அறிக்கை அடிப்படையில், மேலிடம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்.
எனவே, தங்கள் பதவி பறிபோகுமோ என்ற நடுக்கத்தில் அமைச்சர்கள் பலரும் உள்ளனர்.