உலகின் உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி
உலகின் உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி
உலகின் உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி
ADDED : ஜூன் 17, 2024 09:24 PM

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில், செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தின் மீது, சங்கல்தான் - ரியாசி இடையே ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஆற்றின் மேல், 1,178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், உலகின் மிக உயரமான ரயில் பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட 115 அடி அதிக உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த அதிசய பாலம், 'லிம்கா' சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், சங்கல்தான் - ரியாசி இடையே ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, செனாப் பாலத்தின் மீது முதல் முறையாக ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.