ஆபத்தை உணராததால் வயநாட்டில் சோகம்; பறவை கதையில் எச்சரிக்கை மணி
ஆபத்தை உணராததால் வயநாட்டில் சோகம்; பறவை கதையில் எச்சரிக்கை மணி
ஆபத்தை உணராததால் வயநாட்டில் சோகம்; பறவை கதையில் எச்சரிக்கை மணி
ADDED : ஆக 04, 2024 05:42 AM

பாலக்காடு : நிலச்சரிவில் பெரும் பாதிப்புக்கு உள்ளான முண்டகையில் உள்ள வெள்ளார்மலை பள்ளி மாணவர்கள், பேரழிவு குறித்து எழுதியிருந்த கதை, தற்போது வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த, 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 264 பேர் காயமடைந்துள்ளனர்; 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
இந்நிலையில், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள வெள்ளார்மலை அரசு பள்ளி மாணவர்கள் வரவிருக்கும் பேரழிவு பற்றி தற்செயலாக எழுதிய கதை, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி உள்ளது.
பள்ளியில் உள்ள குழந்தைகள் தயாரித்த 'வெள்ளாரகல்லுகள்' என்ற டிஜிட்டல் இதழில் உள்ள கதையில் எதிர்கால விபத்தை குறிப்பிட்டுள்ளனர். பேரழிவு குறித்து ஒரு பறவை குழந்தைகளுக்கு எச்சரிக்கும் வகையில் அந்த கதை உள்ளது.
கதையில் கூறியிருப்பதாவது:
குழந்தைகள் கூட்டம் நீர்வீழ்ச்சியை காண சென்றுள்ளனர். பெய்து வரும் கனமழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கலங்கி வர துவங்கியுள்ளது. அதனால், நீர்வீழ்ச்சியில் இறங்க வேண்டாம் என குழந்தைகள் முடிவெடுத்தனர்.
நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது, அந்த இடத்துக்கு ஒரு பறவை வந்தது. அந்த பறவை விசித்திரமாக இருந்தது. அது பேசும் திறன் கொண்டது.
அந்த பறவை குழந்தைகளிடம் பேசும்போது, 'குழந்தைகளே, நீங்கள் இங்கிருந்து சீக்கிரம் தப்பிச் செல்லுங்கள். இங்கு பெரிய ஆபத்து வரப்போகிறது,' என்று சொல்லி அந்தப் பறவை பறந்து சென்றது. பறவை கூறியதின் பொருள் புரியாவிட்டாலும் அந்த குழந்தைகள் அங்கிருந்து ஓடத் துவங்கினர். இதுதான் கதையின் ஒரு பகுதி. தற்போது இந்த கதையை சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
பறவை கூறியதை கேட்டு குழந்தைகள் ஓடத்துவங்கினர். இயற்கை பேரிடரை உணர்ந்து, மக்களும் அங்கிருந்து வெளியேறி இருந்தால், இவ்வளவு உயிர்கள் மண்ணில் புதைந்திருக்காது, என, ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
முண்டக்கையில் இருந்து, 1.5 கி.மீ., தொலைவில் உள்ளது இந்தப் பள்ளி. 2018ல் ஏற்பட்ட நிலச்சரிவில் பள்ளி கட்டடத்தின் பெரும்பாலான பகுதி அடித்துச் செல்லப்பட்டது. அதன்பின் அரசு கட்டிய பள்ளி கட்டடங்கள் தற்போது ஏற்பட்ட நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. ஏராளமான உடல்கள் இங்கிருந்து மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.