ADDED : ஜூலை 31, 2024 01:32 AM

புதுடில்லிசிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கக் கோரி, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
மதுபான கொள்கை மோசடி தொடர்பான வழக்கில், முதல்வர் கெஜ்ரிவாலை சி.பி.ஐ., கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது. ஏற்கனவே, டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரையும் கைது செய்தது.
இதற்கு, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக கருத்து கூறும் தலைவர்களின் குரல்வளையை ஒடுக்கும் வகையில், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி மத்திய அரசு சிறையில் அடைத்து வருவதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கக் கோரி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட இண்டியா கூட்டணி கட்சியினர் டில்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரசின் லோக்சபா துணைத் தலைவர் கவுரவ் கோகாய், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச்செயலர் பிரகாஷ் காரத் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் ராஜா கூறுகையில், “டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உடல்நிலையை கருதி, சிறையில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்.
''பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது குற்றம் சாட்டியதற்காக, சி.பி.ஐ., அமலாக்கத்துறை வாயிலாக கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்துஉள்ளனர்.
''இதுபோன்ற நடவடிக்கைகளை எத்தனை நாட்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியும்,” என்றார்.
டில்லி பயிற்சி மைய விவகாரத்தில் பார்லிமென்ட் உள்ளே ஆம் ஆத்மிக்கு நெருக்கடி கொடுக்கும் இண்டியா கூட்டணி கட்சியினர், கெஜ்ரிவாலை விடுவிக்கக்கோரி, பார்லிமென்டிற்கு வெளியே போராட்டம் நடத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.