இருப்பது ஒரே ஒரு கேதார்நாத்! உத்தரகண்ட் அரசு கறார்
இருப்பது ஒரே ஒரு கேதார்நாத்! உத்தரகண்ட் அரசு கறார்
இருப்பது ஒரே ஒரு கேதார்நாத்! உத்தரகண்ட் அரசு கறார்
ADDED : ஜூலை 21, 2024 01:14 AM

ஹரித்துவார்: உத்தரகண்டில் புகழ் பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட நான்கு கோவில்களின் பெயர்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், மாநில அரசு சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது.
உத்தரகண்டில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை, 'சார்தாம்' யாத்திரை என்றழைக்கப்படுகிறது.
கேதார்நாத்தில் உள்ள கோவிலை போல, டில்லியிலும் அச்சு அசலாக கோவில் கட்டப்பட உள்ளதாக, சமீபத்தில் ஸ்ரீ கேதார்நாத் தாம் டில்லி அறக்கட்டளை நிறுவனர் சுரேந்திர ரவுடேலா அறிவித்தார்.
இதற்கு உத்தரகண்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எனினும், 'டில்லியில் கேதார்நாத் கோவிலின் மாதிரியை கட்டுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. வேண்டும் என்றால் எங்கள் அறக்கட்டளையின் பெயரிலிருந்து, தாம் என்ற வார்த்தையை நீக்கி விடுகிறோம்.
மக்களிடமிருந்து நன்கொடை பெற்று தான் இந்த கோவிலை கட்டுகிறோம். கேதார்நாத் பெயரில் ஏற்கனவே மும்பை மற்றும் இந்துாரில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன' என, சுரேந்திர ரவுடேலா திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட நான்கு கோவில்களின் பெயர்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க, சட்டம் இயற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
உத்தரகண்ட் அரசின் இந்த முடிவுக்கு, மடாதிபதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, மடாதிபதி பாபா ஹத்யோகி கூறியதாவது:
சனாதன ஹிந்து தர்மத்தின்படி, சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் நான்கு கோவில்கள், 12 ஜோதிர்லிங்கங்கள் மற்றும் 52 சக்தி பீடங்களுக்கு மாற்றாக எதுவும் இருக்க முடியாது. இந்த வழிபாட்டு தலங்களின் பெயரில், வேறு எந்த கோவிலும் அல்லது நம்பிக்கையும் இருக்கக்கூடாது.
சில தனிநபர்கள், அமைப்புகள் சார்பில் கேதார்நாத் பெயரில் கோவில்கள் கட்டப்படுவது சரியான நடைமுறை அல்ல.
கோவில்கள், மத இடங்கள் போன்றவை நாட்டின் கலாசார சொத்துகள். அவற்றை மதிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. உத்தரகண்ட் அமைச்சரவையின் இந்த முடிவு, நம் கலாசார அடையாளத்தையும், உரிமைகளையும் பாதுகாக்க உதவும். முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.