காரை 'ரிவர்ஸ்' எடுத்த பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலி
காரை 'ரிவர்ஸ்' எடுத்த பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலி
காரை 'ரிவர்ஸ்' எடுத்த பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலி
ADDED : ஜூன் 19, 2024 01:14 AM

அவுரங்காபாத், மஹாராஷ்டிராவில், 23 வயது பெண் ஒருவர் மலைப்பகுதியில் காரை 'ரிவர்ஸ்' எடுக்க முயன்றபோது, 300 அடி பள்ளத்தில் விழுந்து பலியானார்.
மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டத்தின் சம்பாஜி நகரைச் சேர்ந்தவர் ஸ்வேதா தீபக், 23. இவர், தன் நண்பர் சூரஜ் சஞ்சாவுடன், 25, இணைந்து நேற்று தன் காரில் அருகே உள்ள சுலிபஞ்சன் மலையில் உள்ள தத்தாத்ரேயர் கோவிலுக்கு சென்றார்.
அப்போது இருவரும் இணைந்து, கார் ஓட்டுவது எப்படி என்பது குறித்து வீடியோ எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் ஸ்வேதா, டிரைவர் இருக்கையில் அமர்ந்த படி காரை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்க, அதை அவரது நண்பர் சூரஜ், காருக்கு வெளியில் நின்றபடி மொபைல் போனில் வீடியோ எடுத்தார்.
சிறிது நேரத்தில், காரை ரிவர்ஸ் எடுப்பது குறித்து விளக்கும் வகையில், ஸ்வேதா தன் காரை பின்னோக்கி செலுத்தினார்.
அப்போது, பின்னால் மிகப்பெரிய பள்ளம் இருப்பது குறித்து, வீடியோ எடுத்த நபர், ஸ்வேதாவிடம் எச்சரித்தார்.
எனினும், அதை பொருட்படுத்தாமல் காரை பின்னோக்கி ஓட்டியதில் மலைப்பகுதி ஒட்டியுள்ள 300 அடி பள்ளத்தில் கார் விழுந்து நொறுங்கியது.
விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த நபர்கள், காருக்குள் படுகாயங்களுடன் கிடந்த ஸ்வேதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயேஉயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
பள்ளத்தை நோக்கி கார் செல்லும்போது, ஸ்வேதாவின் நண்பர், காரை நோக்கி அலறியபடி ஓடியது வீடியோவில் பதிவாகி உள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில், காரை பின்னோக்கி செலுத்தியபோது ஸ்வேதா, 'கிளட்சு'க்கு பதிலாக காரின் வேகத்தை அதிகரிக்கக்கூடிய 'ஆக்சிலேட்டரை' அழுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.