டில்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதில் அறக்கட்டளை உறுதி
டில்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதில் அறக்கட்டளை உறுதி
டில்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதில் அறக்கட்டளை உறுதி
ADDED : ஜூலை 17, 2024 09:09 PM
இப்ராஹிம்பூர்:'கேதார்நாத் கோவிலை கட்டுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. சட்ட நடவடிக்கை அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயார்' என, டில்லி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புனிதத் தலங்களை சார் தாம் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றான கேதார்நாத் புனித கோவிலைப் போன்று டில்லியில் அச்சு அசலாக கோவில் கட்ட ஸ்ரீகேதார்நாத் தாம் டில்லி அறக்கட்டளை முடிவெடுத்தது.
இந்த திருப்பணிக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த அறக்கட்டளை. கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இம்மாத துவக்கத்தில் நடைபெற்றது. இதுபற்றிய அறிவிப்பு வெளியானதும், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் - கேதார்நாத் கோவில் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அறக்கட்டளையின் நிறுவனர் சுரேந்திர ரவுடேலா நேற்று கூறியதாவது:
இங்கு கேதார்நாத் கோவிலின் பிரதியைக் கட்டுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. தேவைப்பட்டால் சட்டப் போராட்டத்துக்குத் தயாராக இருக்கிறோம்.
குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, எங்கள் அறக்கட்டளையின் பெயரிலிருந்து 'தம்' என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் இங்குள்ள பக்தர்களுக்காக கோவில் கட்டுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.
கேதார்நாத் கோவிலைப் போன்றே மாதிரிக்கோவிலைக் கட்டிய முதல் நபர்கள் நாங்கள் அல்ல. இந்துார், மும்பையில் அதேபோன்ற கோவில்கள் உள்ளன. அவர்கள், சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பினால், அனைவருக்கும் எதிராக அதைச் செய்ய வேண்டும்.
நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஹிந்துக்களுக்கும், சனாதன தர்மத்திற்கும் நாங்கள் நல்ல பணிகளைச் செய்து வருகிறோம். சட்டச் சவாலைப் பொருட்படுத்தாமல் கோவில் கட்டுவதைத் தொடருவோம்.
டில்லியில் கேதார்நாத் கோவில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தயாராகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.