தொடர் மழையால் பல மாவட்ட மக்கள் கடும் பாதிப்பு
தொடர் மழையால் பல மாவட்ட மக்கள் கடும் பாதிப்பு
தொடர் மழையால் பல மாவட்ட மக்கள் கடும் பாதிப்பு
ADDED : ஜூலை 21, 2024 07:32 AM

பெங்களூரு: கர்நாடகாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. உத்தரகன்னடா, தட்சிணகன்னடா, குடகு, உடுப்பி, பீதர், தாவணகெரே, சிக்கமகளூரு, துமகூரு என பல மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. பல இடங்களில் வீடுகள் இடிந்து, வீதிக்கு வந்துள்ளனர். கடலோர மாவட்டங்கள், மலைப்பகுதி மாவட்டங்களில், மண் சரிவால் சாலை வழி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம்
உத்தரகன்னடா, முன்டகோடாவின், மளகி கிராமத்தின் அருகில் உள்ள தர்மா அணை நிரம்பி, வழிகிறது. அணை நிரம்பியதால் தண்ணீர் பாய்ந்தோடுவதை காண, சுற்றுப்பகுதி மக்கள் கூட்டமாக வருகின்றனர்.
பல்லாரி, ஹரப்பனஹள்ளியின், தாவரகுந்தி அருகில் பாயும் துங்கபத்ரா ஆற்றில், நீர்மட்டம் அதிகரிக்கிறது. ஆற்றை ஒட்டியுள்ள வயல், தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஹலவாகலு - கர்ப்பகுடிக்கு இணைப்பு ஏற்படுத்தும் சாலை ஏரியாக மாறியுள்ளது. மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
தார்வாட், நவல்குந்தின் கவுரம்மா அனுராஜ் என்பவரின் வீட்டின் சுவர், நேற்று காலை இடிந்து விழுந்தது. பெளவாரா, நாயகனுாரில் தலா ஒரு வீட்டின் சுவர் இடிந்தது. மழைக்கு பல வீடுகளின் மேற்கூரை கசிவதால், மக்கள் உயிர் பயத்தில் வசிக்கின்றனர்.
மாணவர்கள் பரிதவிப்பு
கலபுரகியில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்வதால் மக்கள் வீட்டில் இருந்து, வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல, மாணவர்கள் பரிதவித்தனர்.
நவல்குந்தின், பிய்யாபானி ஏரியா, பசவனகனி, அம்பேத்கர் நகர், ரெஸ்ட் கேம்ப் லே - அவுட், ஹனுமன்நகர், விஜயநகர் உட்பட பல்வேறு இடங்களில் சாக்கடைகள் நிரம்பி கழிவு நீர், சாலைகளில் பாய்ந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
ஷிவமொகாவில் மாவட்டத்தில் மழை தற்போது குறைந்துள்ளது என்றாலும், தொடர்ந்து ஏழு நாட்கள் மழை பெய்ததால், வெள்ள பெருக்கு இன்னும் வடியவில்லை. சாகராவின், தாளிகொப்பாவில் உள்ள வரதா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 2,000 ஏக்கரில் நெல் வயலில் சூழ்ந்த வெள்ளம், இன்னும் வடியவில்லை.
தாளிகொப்பா, கான்ளே, சைதுார், மன்டகளகே உட்பட சுற்றுப்புற கிராமங்களில் வெள்ளம் இன்னும் குறையவில்லை. சைதுார், கான்ளே இடையிலான கன்னஹொளே பாலம் மீது, தண்ணீர் பாய்கிறது. இதனால் மக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாகராவின் பசவனஹொளே அணை நிரம்பியுள்ளது. காந்திநகர் லே - அவுட்டில், சில வீடுகளின் சுவர்கள் இடிந்துள்ளன.
போக்குவரத்து பாதிப்பு
தொடர் மழையால், மைசூரின் ஸ்ரீராம்புரா - தட்டஹள்ளி இடையிலான ரிங் ரோட்டில் மண் சரிந்துள்ளது. மெயின் ரோட்டில் மண் சரிந்ததால், போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மண் சரிந்த இடத்தில் கிணறு தென்படுகிறது. இது புராதன காலத்து கிணறாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.