ADDED : மார் 11, 2025 11:10 PM

கர்நாடகாவில் பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வருவதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கடின உழைப்பு உள்ளது என்பதை, அக்கட்சியில் உள்ள யாராலும் மறுக்க முடியாது. இதனால் தான் அவருக்கு 75 வயதை தாண்டியும், முதல்வர் பதவி கொடுத்து கட்சி மேலிடம் அழகு பார்த்தது. ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ., கடந்த 2023 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தது.
பா.ஜ.,வின் பலமே லிங்காயத் ஓட்டுகள் தான். அந்த சமூக ஓட்டுகளை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கும் வகையில், பா.ஜ., தலைவராக, எடியூரப்பாவின் இரண்டாவது மகன் விஜயேந்திராவை கட்சி மேலிடம் நியமித்தது.
கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.,க்களான பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விஜயேந்திராவுக்கு எதிராக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
நாட்கள் செல்ல செல்ல எத்னால் அணியில் எம்.எல்.ஏ., ஹரிஷ், முன்னாள் அமைச்சர்கள் அரவிந்த் லிம்பாவளி, குமார் பங்காரப்பா, முன்னாள் எம்.பி.,க்கள் சித்தேஸ்வர், பிரதாப் சிம்ஹா, எடியூரப்பாவின் தங்கை வழி பேரன் சந்தோஷ் ஆகியோரும் இணைந்தனர். இவர்கள், சில மத்திய அமைச்சர்கள் மூலம் கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில், மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சவுகான், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, கர்நாடகா வந்த போது, பா.ஜ., தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கும் என்று கூறியதால், எத்னால் அணி மகிழ்ச்சி அடைந்தது. தங்கள் தரப்பில் இருந்து ஒருவரை, தலைவர் பதவிக்கு நிறுத்தவும் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தினர்.
ஆனால், மேலிடம் என்ன நினைத்தததோ தெரியவில்லை. இதுவரை தலைவர் பதவிக்கு தேர்தல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதற்கிடையில், டில்லியில் முகாமிட்ட எத்னால் குழுவினர், விஜயேந்திராவுக்கு எதிராக மேலிட தலைவர்களிடம் புகார் வாசிக்க முயற்சி செய்தனர்; அதுவும் நடக்கவில்லை.
ஒரு வழியாக கண்டத்தில் இருந்து தப்பிய மகிழ்ச்சியில், விஜயேந்திரா தனது பணிகளை செய்ய ஆரம்பித்தார். இதனால், எத்னால் அணியினர் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தனர். இப்போது மீண்டும் ஆரம்பித்து உள்ளனர்.
'எடியூரப்பா லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரே இல்லை' என்று, எத்னால் 'பகீர்' தகவலை கூறினார். 'விஜயேந்திரா எந்த நேரத்திலும் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம். நாங்கள் அமைதியாக இருக்கவில்லை' என்று, எம்.எல்.ஏ., ஹரிஷும் கூறி உள்ளார். இதுபோல எத்னால் அணியில் உள்ளோரும் எடியூரப்பா, விஜயேந்திராவுக்கு எதிராக அம்புகளை வீச துவங்கி உள்ளனர். இவற்றை விஜயேந்திரா எப்படி சமாளிப்பார் என்பதற்கு வரும் நாட்களில் விடை தெரிந்து விடும்.
- நமது நிருபர் -