ஏழைகளின் பசிப்பிணி போக்கும் மனிதநேயர்!
ஏழைகளின் பசிப்பிணி போக்கும் மனிதநேயர்!
ஏழைகளின் பசிப்பிணி போக்கும் மனிதநேயர்!
ADDED : ஜூலை 27, 2024 10:59 PM

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பதை அறிவோம். அதுவும் ஏழை மக்களின் பசிப்பிணியை போக்குவது மிக பெரிய விஷயம். அத்தகைய பணியை, பெங்களூரு எச்.ஏ.எல்., அடுத்த ஜெகதீஷ் நகரை சேர்ந்த நரசிம்மராவ், 43 செய்து வருகிறார்.
மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இவரது குடும்பம், ஆரம்பத்தில் வறுமையில் இருந்திருக்கிறது. அப்போது அவர் பட்ட கஷ்டத்தை சொல்லவே அவர் தயங்குகிறார்.
கொரோனா கால கட்டத்தில், 2020ல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கிய காலமிது. அவசர தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. அந்த கால கட்டத்தில், வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவும், உணவுப் பொருட்கள் இன்றியும் தவித்தனர்.
புலம் பெயர்வு
நம்மில் பலருக்கும் அந்த நிலைமை ஏற்பட்டிருந்தது. தன்னார்வலர்களும், அரசும், தனியார் நபர்களும் உணவு, உணவு பொருட்கள் வழங்கினர்.
அப்போது, மனிதாபிமானம் கொண்ட நரசிம்மராவும், ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கும் இருப்பிடத்தை அறிந்து உணவு வழங்கினார்.
இதில் ஆச்சரியம் எதுவும் இல்லையே என்று நினைக்கலாம். ஆனால், 2020 முதல், இப்போது வரை ஏழைகளின் பசியை ஆற்றி வருகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எச்.ஏ.எல்., விபூதிபுரா, மாரத்தஹள்ளி, கே.ஆர்.புரம், ராமமூர்த்தி நகர், மஹாதேவபுரா, பெல்லந்துார் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று, சமைத்த உணவை புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், சாலையோரங்களில் ஆதரவின்றி இருப்பவர்களுக்கும் வழங்கி வருகிறார்.
பாக்கு தட்டுகள்
வாரந்தோறும் 20 கிலோ அரிசியில் உணவு சமைத்து, ஆட்டோவில் கொண்டு சென்று தொழிலாளர்கள் இருக்கும் இடத்தில் வழங்குகிறார். பார்சலாக கட்டி, சாலையோரத்தில் இருப்போருக்கு வழங்கப்படுகிறது. இப்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்.
உணவு சமைப்பதற்காக தன் வீட்டின் அருகில், ஒரு அறை எடுத்துள்ளார். அங்கேயே உணவ பொருட்களை வைத்துள்ளார். உணவு வழங்க பாக்கு தட்டுகள், சமைப்பதற்கு தேவையான சாமான்கள் என அனைத்தையும் சொந்தமாக வாங்கி உள்ளார்.
உணவு கொண்டு செல்லும் போது, இவரை பார்த்ததும் மக்கள் தானாக வந்து விடுகின்றனர். ஒருமுறை சற்று தாமதமானாலும் ஏன் இன்னும் வரவில்லை என்று மக்கள் காத்திருக்கின்றனர்.
இது குறித்து நரசிம்மராவ் கூறியதாவது:
கொரோனா காலத்தில் மக்கள் பட்ட கஷ்டத்தை பார்த்த போது, வேதனையாக இருந்தது. அப்போதே, இனி நாம் சம்பாதிக்கும் பணத்தில், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை, ஏழைகளின் பசியை போக்க, ஒதுக்குவதற்கு முடிவு செய்து விட்டேன்.
ஏழைகளுக்கு உணவு வழங்குவதில் மனது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் குடும்பத்தினரும், சில நண்பர்களும் உறுதுணையாக இருக்கின்றனர். அனைவருமே முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு உதவ வந்தால், நம் நாட்டை மெல்ல, மெல்ல வறுமையில் இருந்து மீட்டு விடலாம். நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். நம்மை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.